பாகிஸ்தான், சீனா கூட்டு போர் பயிற்சி தொடங்கியது - இரு நாட்டு விமான படைகளும் பங்கேற்பு


பாகிஸ்தான், சீனா கூட்டு போர் பயிற்சி தொடங்கியது - இரு நாட்டு விமான படைகளும் பங்கேற்பு
x
தினத்தந்தி 3 Dec 2018 11:30 PM GMT (Updated: 3 Dec 2018 7:50 PM GMT)

பாகிஸ்தான், சீனா கூட்டு போர் பயிற்சி தொடங்கியது. இதில் இரு நாட்டு விமான படைகளும் பங்கேற்றுள்ளன.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையே நல்லுறவு இருந்து வருகிறது. இரு நாடுகளிலும் யார் ஆட்சி நடைபெற்றாலும், ஆட்சிகள் மாறினாலும், அவர்களின் நட்புறவு பாதிப்பதில்லை. இரு தரப்பு ராணுவ உறவும் வலுவாக உள்ளது.

அது மட்டுமின்றி இரு நாடுகள் இடையே பாதுகாப்பு சார்ந்த ஒத்துழைப்பும் மிக ஆழமாக உள்ளது. மேலும், புதிதாக சீனா, பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் என்ற உள்கட்டமைப்பு திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

சி.பி.இ.சி. என்னும் இந்த சீனா, பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் பாகிஸ்தான் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கும், அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிவீதம் அதிகரிக்கவும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று கூறப்படுகிறது.இரு நாடுகளும் கூட்டாக போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ள இம்ரான்கான், கடந்த மாதத்தின் தொடக்கத்தில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங்கை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

சீன பிரதமர் லீ கெகியாங்கையும் இம்ரான்கான் சந்தித்து, இரு நாடுகள் இடையேயான உறவை பலப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவாதித்தார்.மேலும், சீனா, பாகிஸ்தான் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அது மட்டுமின்றி, நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிற பாகிஸ்தானுக்கு தேவையான அனைத்து நிதி உதவிகளையும் அளிக்க சீனா முன் வந்துள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் கராச்சி நகரில் அமைந்துள்ள விமானப்படை தளத்தில் ‘ஷாகீன்-7’ என்னும் பாகிஸ்தான், சீனா கூட்டு போர் பயிற்சி நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது.

இதில் இரு நாடுகளின் போர் விமானங்கள், ‘அவாக்ஸ்’ விமானங்கள் கலந்துகொண்டுள்ளன. மேலும், இரு தரப்பு விமானப்படை வீரர்களுடன் போர் விமானங்களை இயக்குகிற விமானிகள், வான் பாதுகாப்பு கட்டுப்பாட்டாளர்கள், தொழில் நுட்பக்குழுவினர் ஆகியோரும் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இது இரு நாட்டு விமானப்படைகளின் 7-வது கூட்டு போர் பயிற்சி ஆகும். 6-வது கூட்டு போர் பயிற்சி, சீனாவில் கடந்த ஆண்டு நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.

7-வது கூட்டு போர் பயிற்சி எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.


Next Story