முதல் முறையாக பிரேசில் நாட்டில் மருத்துவ அதிசயம் - இறந்த பெண்ணின் கருப்பையை கொண்டு இன்னொரு பெண்ணுக்கு குழந்தை


முதல் முறையாக பிரேசில் நாட்டில் மருத்துவ அதிசயம் - இறந்த பெண்ணின் கருப்பையை கொண்டு இன்னொரு பெண்ணுக்கு குழந்தை
x
தினத்தந்தி 5 Dec 2018 11:30 PM GMT (Updated: 5 Dec 2018 9:08 PM GMT)

முதல் முறையாக மருத்துவ அதிசயமாக, பிரேசில் நாட்டில் இறந்து போன ஒரு பெண்ணின் கருப்பையை பொருத்திக்கொண்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.

பிரேசிலியா,

கருப்பை இல்லாத பெண்களுக்கு கருப்பை தானம் பெற்று, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் பொருத்துவது உண்டு. உயிரோடு இருக்கிற பெண்களின் கருப்பையை தானம் பெற்று, இப்படி பொருத்துவது இயல்பாக நடக்கிற ஒன்றுதான். பல தாய்மார்கள் கூட, தங்கள் மகள்களுக்கு இப்படி கருப்பை தானம் செய்திருக்கிறார்கள்.

அப்படி கருப்பை தானம் பெற்ற பெண்கள் குழந்தையும் பெற்றிருக்கிறார்கள்.

ஆனால் பிரேசில் நாட்டில் 32 வயதான ஒரு பெண்ணுக்கு முதல்முறையாக இறந்து போன ஒரு பெண்ணின் கருப்பையை தானம் பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தினார்கள். இந்த அறுவை சிகிச்சை சா பாவ்லோ நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது.

அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணுக்கு ‘மேயர் ரோகிட்டன்ஸ்கை சின்ட்ரம்’ என்ற அபூர்வ நோய் இருந்தது. 4 ஆயிரத்து 500 பெண்களில் ஒரு பெண்ணுக்கு இந்த நோய் தாக்குகிறதாம்.

இந்த நோய் தாக்குகிற பெண்களுக்கு பெண்ணுறுப்பும், கருப்பையும் இயல்பாக அமைவது இல்லை. எனவே பிரேசில் பெண்ணுக்கு கருப்பை, பிறவியிலேயே இல்லை.

எனவே இந்த பிரேசில் பெண்ணுக்கு இயல்பாக கருத்தரித்து குழந்தை பிறப்பிக்கிற ஆற்றல் இல்லை. அதே நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு சினைப்பைகள் நல்ல நிலையில் இருப்பதை மருத்துவர்கள் கண்டார்கள்.

இந்த நிலையில்தான் அந்தப் பெண்ணுக்கு இறந்த ஒரு பெண்ணின் கருப்பையை தானம் பெற்று, 10 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக பொருத்தினார்கள்.

அந்தப் பெண்ணுக்கு இப்படி கருப்பை தானம் பெற்ற 6 வாரங்களுக்கு பின்னர் மாத விலக்கு நிகழத்தொடங்கியது.

அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் சினை முட்டையை வெளியே எடுத்து செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தார்கள். அப்படியே அறுவை சிகிச்சையின் மூலம் அந்தப் பெண்ணின் சினை முட்டையை வெளியே எடுத்து பத்திரப்படுத்தினர்.

அந்தப் பெண்ணின் கணவரது உயிரணுக்களையும் சேகரித்தனர்.

அதைத் தொடர்ந்து சினை முட்டையையும், உயிரணுக்களையும் செயற்கை முறையில் இணைத்தனர். கரு உருவானது. அந்தக் கருவை அந்தப் பெண்ணின் கருப்பையில் வைத்தனர். அந்தக் கரு இயல்பாக வளர்ந்தது. முறையாக அந்தப் பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனைகளையும் தொடர்ந்தனர்.

இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் எடை 2½ கிலோ ஆகும். இது ஒரு மருத்துவ அதிசயமாக அமைந்துள்ளது.

அந்தப் பெண் பிரசவித்த ஆஸ்பத்திரியின் டாக்டர் டேனி எஜசென்பெர்க் கூறும்போது, “உயிரோடு உள்ள பெண்களின் கருப்பையை தானம் பெற்று, கருப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் செய்வது மருத்துவத்தில் மைல்கல். ஆனால் அப்படி கருப்பை தானம் செய்வது என்பது மிகவும் அபூர்வமாக அமைகிறது. கருப்பை மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிற பெண்களின் நெருங்கிய உறவினர்கள் அல்லது நண்பர்கள் மட்டுமே இவ்வாறு கருப்பை தானம் செய்ய முன் வருகின்றனர். மற்றபடி யாரும் கருப்பை தானம் செய்ய முன்வருவதில்லை” என்றார்.

இறந்த பெண்ணின் கருப்பையை தானம் பெறுவது பற்றி லண்டன் இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த டாக்டர் சர்த்ஜன் சாசோ கூறும்போது, “இறந்து போன பெண்ணின் கருப்பையை தானம் பெற்று, பொருத்தி இப்போது ஒரு பெண்ணுக்கு முதல் முறையாக குழந்தை பிறக்கச்செய்து இருப்பது புதிய நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது. இது சிகிச்சைக்கான செலவையும் குறைப்பதாக உள்ளது. இது கருப்பை தானத்துக்கான வாய்ப்பை அதிகரிப்பதாகவும் அமைந்துள்ளது” என்று கூறினார்.



Next Story