கனடாவில் சீன தொலை தொடர்பு நிறுவன அதிபர் மகள் கைது


கனடாவில் சீன தொலை தொடர்பு நிறுவன அதிபர் மகள் கைது
x
தினத்தந்தி 6 Dec 2018 11:30 PM GMT (Updated: 6 Dec 2018 6:34 PM GMT)

சீன நாட்டின் தொலைதொடர்பு நிறுவன அதிபரின் மகள், கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுகிறார். இந்த நடவடிக்கை, சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

ஒட்டவா,

சீனாவை சேர்ந்த பிரபல பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனம் ஹூவாய். இந்த நிறுவன அதிபர் ரென் ஜெங்பெய். இவரது மகள், மெங்வான்ஜவ்.

இவர் அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஆவார். இவர் கனடா நாட்டில் வாங்கூவர் நகரில் கடந்த 1–ந் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இதுபற்றிய தகவலை இப்போதுதான் கனடாவின் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அவரை தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. எனவே அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுகிறார்.

சீனாவுக்கு எரிச்சல்

அதே நேரத்தில் மெங்வான்ஜவ் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இது சீனாவுக்கு அமெரிக்கா மீது கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் பனிப்போர் நிலவி வந்தது. அது வர்த்தகப்போராக மாறியது. இது உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், கடந்த 

1–ந் தேதி அர்ஜென்டினா தலைநகர் பியுனோஸ் அயர்ஸ் நகரில் ‘ஜி–20’ உச்சி மாநாட்டின் இடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். அதில் இரு தரப்பு வர்த்தக போரை நிறுத்தி வைக்க உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி, ஜனவரி 1–ந் தேதி முதல் அமெரிக்க பொருட்களுக்கு சீனாவும், சீனப்பொருட்களுக்கு அமெரிக்காவும் கூடுதல் 

வரி விதிக்கப்போவதில்லை. 90 நாட்களுக்கு இது நீடிக்கும். அதற்குள் இரு தரப்பும் பேசி தங்கள் பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இப்போது சீன தொலை தொடர்பு நிறுவனத்தின் மூத்த அதிகாரி மெங்வான்ஜவ் கைது செய்யப்பட்டிருப்பது இரு தரப்பு உறவில் மேலும் உரசலை உருவாக்கும்.

விடுவிக்க சீனா கோரிக்கை

 கனடாவின் ஒட்டவா நகரில் உள்ள சீன தூதரகம் உடனடியாக மெங்வான்ஜவ்வை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. இத்தகைய கைது நடவடிக்கையை கடுமையாக எதிர்ப்பதாகவும், இது மனித உரிமையை மிக மோசமாக பாதிப்பதாக அமைந்துள்ளதாகவும் சீன தூதரகம் கூறி உள்ளது.

மெங்வான்ஜவ் கைது பற்றி தங்களுக்கு கூடுதல் விவரம் எதுவும் தெரியவில்லை. குற்றச்சாட்டு பற்றி மிகச்சிறிய அளவில்தான் தகவல்கள் கிடைத்துள்ளன என்று  ஹூவாய் நிறுவனம் கூறுகிறது.

பின்னணி என்ன?

ஈரான் மீதும், வடகொரியா மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த தடைகளை ஹூவாய் நிறுவனம் மீறியதாக அமெரிக்கா கருதுகிறது. இது தொடர்பாக அமெரிக்கா விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில்தான் மெங்வான்ஜவ் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே அவர் இந்த விவகாரத்தில்தான் கைது செய்யப்பட்டிருப்பார் என யூகிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் பொருளாதார தடைகளை  ஹூவாய் நிறுவனம் மீறியதாக எழுந்துள்ள புகார் குறித்து அந்த நிறுவனம் மீது அமெரிக்கா விசாரணையை தொடங்கி உள்ளது என கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் ‘வால்ஸ்டிரிட் ஜர்னல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டது நினைவுகூரத்தக்கது. 

Next Story