சி.என்.என். செய்தி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல், ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றம்


சி.என்.என். செய்தி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல், ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றம்
x
தினத்தந்தி 7 Dec 2018 6:36 AM GMT (Updated: 7 Dec 2018 6:36 AM GMT)

சி.என்.என். செய்தி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

நியூயார்க், 

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல செய்தி தொலைக்காட்சி நிறுவனம் சி.என்.என். இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக நியூயார்க் உட்பட பல்வேறு இடங்களில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நியூயார்க்கில் உள்ள அலுவலகத்துக்கு வியாழக்கிழமை இரவு (உள்ளூர் நேரப்படி) தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபர், அலுவலக கட்டிடத்தில் ஐந்து இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார். 

வெடிகுண்டு வைக்கப்பட்டதாக விடுக்கப்பட்ட மிரட்டலை அடுத்து, அவசர அவசரமாக ஊழியர்கள் அனைவரும் கட்டிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தீ தடுப்பு துறையினர் வருகை தந்தனர். 

அலுவலகம் முழுவதும் சல்லடை போட்டு தேடிய பின்னர், வெடிகுண்டு  மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. இதையடுத்து சி.என்.என். நிறுவனம் தனது ஊழியர்களுக்கு  பிரச்சினை எதுவும் இல்லை எனவும் காலை வழக்கம் போல் அலுவலகம் வரலாம் எனவும் குறுந்தகவல் அனுப்பியது. சி.என்.என். நிறுவன கட்டிடத்திற்கு வெளியே வெடிகுண்டு நிபுணர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 

Next Story