மீண்டும் தனது ஏவுகணை தளத்தை மேம்படுத்தி வரும் வடகொரியா செயற்கைக்கோள் படங்கள்


மீண்டும் தனது ஏவுகணை தளத்தை மேம்படுத்தி வரும் வடகொரியா செயற்கைக்கோள் படங்கள்
x
தினத்தந்தி 7 Dec 2018 10:58 AM GMT (Updated: 7 Dec 2018 10:58 AM GMT)

அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டங்களை கைவிடுவதாக கூறிய வடகொரியா தற்போது தனது ஏவுகணை தளத்தை மேம்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்திப்புக்கு பின் தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்து விடுவதாகவும், இனி அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ள மாட்டோம் என்று வடகொரியா அறிவித்தது.

அதன் பின் அணு ஆயுத கூடங்களை வடகொரியா இடித்து விட்டதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து வடகொரியா, அமெரிக்கா தங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற தவறினால் நாங்கள் மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்துவோம் என்று பகீரங்கமாக எச்சரிக்கை விடுத்தது.

அதாவது கிம் மற்றும் டிரம்ப் சந்திப்பின் போது வடகொரியா எப்படி அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதாக கூறியதோ, அதே போன்று அமெரிக்காவும் வடகொரியா மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்குவதாக அறிவித்தது.

ஆனால் அமெரிக்கா கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை என்று வடகொரியா சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் ஏவுகணை திட்டங்களைக் கைவிடுவதாக அளித்துள்ள வாக்குறுதியை வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் இதுவரை நிறைவேற்றவில்லை என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன் கடந்த செவ்வாய் கிழமை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வட கொரியாவின் மலைப் பகுதிக்குள் அமைந்துள்ள யெயோன்ஜியோ-டாங் சுரங்க ஏவுதளத்தை அந்த நாடு விரிவுப்படுத்தியுள்ளது. இதை அமெரிக்க ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

செயற்கைக்கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.

விரிவுப்படுத்தப்பட்ட ஏவுதளம், தொலைதூர ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டது ஆகும். அத்தகைய ஏவுகணைகளின் மூலம் அணு ஆயுதத் தாக்குதலையும் நடத்த முடியும்.

இதுதவிர, மேலும் ஒரு புதிய ஏவுகணை தளத்தையும் வட கொரியா உருவாக்கியுள்ளது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதி வரை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை மிரட்டி வந்த வடகொரியா மீண்டும் தற்போது ஏவுகணை தளத்தை விரிவுப்படுத்துவது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story