உலக செய்திகள்

அமெரிக்காவின் பொருளாதார தடை சட்டவிரோதம், நியாயமற்றது; ஈரான் அதிபர் குற்றச்சாட்டு + "||" + Iran's Rouhani: US sanctions are 'economic terrorism'

அமெரிக்காவின் பொருளாதார தடை சட்டவிரோதம், நியாயமற்றது; ஈரான் அதிபர் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் பொருளாதார தடை சட்டவிரோதம், நியாயமற்றது; ஈரான் அதிபர் குற்றச்சாட்டு
எங்கள் நாட்டின் மீது அமெரிக்கா விதித்துள்ள தடையானது சட்டவிரோதம் மற்றும் நியாயமற்றது என அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார்.
தெஹ்ரான்,

கடந்த 2015-ம் ஆண்டு, அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்தபோது, ஈரானுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

டொனால்டு டிரம்ப் ஜனாதிபதி ஆன நிலையில், அந்த ஒப்பந்தத்தால் பயன் இல்லை என்று கருத்து தெரிவித்தார். ஈரான் தனது வருவாயை பயங்கரவாதத்துக்கு பயன்படுத்துவதாகவும் நினைத்தார். எனவே, கடந்த மே மாதம், ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது.

அத்துடன், ஈரானுடன் எவ்வித வர்த்தக தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று மற்ற நாடுகளை டிரம்ப் மிரட்டினார். ஈரானின் வருவாயை குறைக்க நினைத்த அவர், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நவம்பர் 4ந்தேதியுடன் எல்லா நாடுகளும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்.  இதில் இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஈரான் அதிபர் ஹசன் ருஹானி பேசினார்.  அவர் பேசும்பொழுது, கவுரமிக்க நாடான ஈரான் மீது விதித்துள்ள அமெரிக்காவின் நியாயமற்ற மற்றும் சட்டவிரோத முறையிலான தடைகளானது தெளிவாக எங்களுடைய நாட்டை இலக்காக கொண்டு நடைபெறும் தீவிரவாதம் என கூறினார்.

ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் அச்சத்தினை உருவாக்குவதற்காக பொருளாதார தீவிரவாதம் ஆனது வடிவமைக்கப்பட்டு உள்ளது.  இந்த இலக்கிற்குள்ளான நாட்டில் முதலீடு செய்யாமல் தடுக்கும் வகையில் மற்ற நாடுகளுக்கும் அச்சத்தினை தோற்றுவித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...