உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 12 Dec 2018 11:00 PM GMT (Updated: 12 Dec 2018 5:12 PM GMT)

* சீனாவின் சட்ட விதிகளை மீறி செயல்பட்டதற்காக கனடாவின் முன்னாள் தூதர் ஒருவரை தாங்கள் கைது செய்து இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

* ஆப்கானிஸ்தானின் சபூல் மாகாணம் மிசான் மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகளை குறிவைத்து ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 13 பயங்கரவாதிகள் கொன்றுகுவிக்கப்பட்டனர். அதே போல் பக்டிகா மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 3 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர். 

*  பாகிஸ்தான், சீனா, சவுதி அரேபியா உள்ளிட்ட 7 நாடுகளில் மத சுதந்திரத்துக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் கூறுகிறது. இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள பாகிஸ்தான் இது ஒரு தலைபட்சமானது என்றும் அரசியல் நோக்குடையது என்றும் சாடியது. 

* ஏமன் நாட்டின் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான, ஏமன் அரசு மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தை சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ஸ்டாக்ஹோம் சென்றார். 

* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சான் மேட்டியோ கவுண்டியில், மென்லோ பார்க்கில் அமைந்துள்ள ‘பேஸ் புக்’ அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக நியூயார்க் நகர போலீசாருக்கு தொலைபேசியில் தகவல் கிடைத்தது. அதன் பேரில் ‘பேஸ் புக்’ அலுவலகத்தை சுற்றிவளைத்து சோதனை நடத்தியதில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. 

* வங்காளதேசத்தில் வருகிற 30–ந்தேதி நடக்க இருக்கும் பொதுத்தேர்தலை ஓட்டி நாடு முழுவதும் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. பிரசாரத்தின் போது பல்வேறு மாவட்டங்களில் ஆளும் அவாமி கட்சி மற்றும் வங்காளதேச தேசியவாத கட்சி தொண்டர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிர் இழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.


Next Story