துருக்கியில் மற்றொரு ரெயில் என்ஜின்மீது அதிவேக ரெயில் மோதி விபத்து; 9 பேர் பலி


துருக்கியில் மற்றொரு ரெயில் என்ஜின்மீது அதிவேக ரெயில் மோதி விபத்து; 9 பேர் பலி
x
தினத்தந்தி 13 Dec 2018 11:15 PM GMT (Updated: 13 Dec 2018 8:03 PM GMT)

துருக்கியின் தலைநகரான அங்காராவில் இருந்து, நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கொன்யா நகருக்கு ஒரு அதிவேக ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

அங்காரா, 

அதிவேக ரெயில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 6.30 மணிக்கு மார்சண்டீஸ் ரெயில் நிலையத்தை கடந்து சென்றது.

அப்போது அங்கே தண்டவாளத்தை சோதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரெயில் என்ஜினுடன், அந்த அதிவேக ரெயில் கடுமையாக மோதி, பயணிகள் நடந்து செல்லும் பாதையில் பாய்ந்தது. இதில் அந்த ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. விபத்தின்போது பலத்த சத்தம் எழுந்ததால், பயணிகள் அச்சத்தில் அலறினர்.

இந்த கோர விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.

ஆனால் பின்னர் 9 பேர் பலியானதாகவும், 47 பேர் படுகாயம் அடைந்ததாகவும் உறுதி செய்யப்பட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்புப்படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக அந்த தடத்தில் சில மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதித்தது.

இந்த ரெயில் விபத்துக்கு சிக்னல் கோளாறு காரணமாக இருக்கக்கூடும் என முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story