பாகிஸ்தானில் தேடுதல் வேட்டையின்போது 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


பாகிஸ்தானில் தேடுதல் வேட்டையின்போது 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 15 Dec 2018 11:45 PM GMT (Updated: 15 Dec 2018 7:21 PM GMT)

பாகிஸ்தானில் நடந்த தேடுதல் வேட்டையின்போது 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். முன்னதாக அவர்கள் நடத்திய தாக்குதலில் படை வீரர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் தலீபான், ஹக்கானி நெட்வொர்க், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட எண்ணற்ற பயங்கரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில், அங்கு பலுசிஸ்தான் மாகாணம் டுர்பாட் பிராந்தியத்தில் வாகாய் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு உளவு தகவல் கிடைத்தது.

இதையடுத்து படை வீரர்கள், அங்கு நேற்று முன்தினம் இரவில் வாகனங்களில் விரைந்தனர். பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தெரிய வந்த இடத்தை அவர்கள் சுற்றி வளைக்க முற்பட்டனர்.

ஆனால் படை வீரர்கள் வந்து கொண்டிருப்பதை பயங்கரவாதிகள் மோப்பம் பிடித்து விட்டனர். உடனடியாக அவர்கள் படை வீரர்கள் வந்த வாகனம் ஒன்றின் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் அந்த வாகனத்தில் பயணம் செய்த படை வீரர்கள் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

பயங்கரவாதிகள் அத்துடன் நிற்காமல் தொடர்ந்து, எஞ்சிய படை வீரர்கள் மீதும் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். படை வீரர்களும் தங்கள் துப்பாக்கிகளால் பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினர் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது.

இந்த சண்டையின் முடிவில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதையடுத்து அங்கு கூடுதல் படையினர் குவிக்கப்பட்டனர். படுகாயம் அடைந்த படை வீரர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பலியான படை வீரர்கள், சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பலுசிஸ்தான் தகவல் துறை மந்திரி ஜாகூர் புலேடி தெரிவித்தார்.

இந்த மோதலை தொடர்ந்து எஞ்சிய பயங்கரவாதிகள் அங்கே மலைப்பகுதிக்குள் ஓட்டம் எடுத்து விட்டனர். இருப்பினும் அந்தப் பகுதியில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

படை வீரர்களின் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி 6 பேரை கொன்று விட்டதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த கோழைத்தனமான தாக்குதல் மூலம் படை வீரர்களின் மன உறுதியை எதிரிகளால் குலைத்து விட முடியாது. பயங்கரவாதிகளை முழுமையாக ஒழிப்பதுவரை அவர்களுக்கு எதிரான நடவடிக்கை தொடரும். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மக்மூது குரேஷியும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

Next Story