உலக செய்திகள்

அரசியல் குழப்பம் முடிவுக்கு வருகிறது : இலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்பு + "||" + Sri Lankan Prime Minister Ranil Wickramasinghe has been sworn in today

அரசியல் குழப்பம் முடிவுக்கு வருகிறது : இலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்பு

அரசியல் குழப்பம் முடிவுக்கு வருகிறது : இலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்பு
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே நேற்று விலகினார். எனவே அங்கு புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொழும்பு,

இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதனால் ரனில் விக்ரமசிங்கேவை அதிரடியாக நீக்கிய சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி புதிய பிரதமராக நியமித்தார்.


இதனால் இலங்கை அரசியலில் வரலாறு காணாத குழப்பம் நிலவியது. இதனால் சிறிசேனாவுக்கு நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தை அதிரடியாக கலைத்து விட்டு தேர்தலை அறிவித்தார். இதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.

இந்த வழக்கில் கடந்த 13-ந்தேதி தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது சட்ட விரோதம் என அறிவித்தது. இதைப்போல ராஜபக்சே மற்றும் அவரது தலைமையிலான மந்திரி சபை செயல்படுவதற்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட கோர்ட்டு உத்தரவையும் நேற்றுமுன்தினம் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

இந்த 2 உத்தரவுகளையும் தொடர்ந்து அதிபர் சிறிசேனா மற்றும் ராஜபக்சேவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இலங்கை அரசியலில் மேலும் குழப்பம் அதிகரிப்பதை விரும்பாத ராஜபக்சே, பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்தார். அதன்படி நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ராஜபக்சே பதவி விலகியதை தொடர்ந்து புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே மீண்டும் பதவியேற்பார் எனவும், இந்த பதவியேற்பு நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 30 பேர் கொண்ட மந்திரிசபை நாளை (திங்கட்கிழமை) பதவியேற்கிறது.

முன்னதாக, ரனில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக ஒரு போதும் நியமிக்கமாட்டேன் என அதிபர் சிறிசேனா கூறி வந்தார். ஆனால் நேற்று முன்தினம் அவருடன் தொலைபேசியில் பேசிய சிறிசேனா, பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டதாக தெரிகிறது.

தங்கள் தலைவருக்கு (ரனில் விக்ரமசிங்கே) பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும் என அதிபரின் செயலாளர் தெரிவித்தாக, ஐக்கிய தேசிய கட்சி பொதுச்செயலாளர் அகிலா விராஜ் காரியவாசம் கூறினார். முன்னதாக ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நம்பிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் திடீரென பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சே பதவி விலகியதுடன், புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே மீண்டும் பதவியேற்பதை தொடர்ந்து, அங்கு சுமார் 2 மாதங்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வருகிறது.