பாகிஸ்தானில் 15 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை - ராணுவ தளபதி உறுதி செய்து உத்தரவு


பாகிஸ்தானில் 15 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை - ராணுவ தளபதி உறுதி செய்து உத்தரவு
x
தினத்தந்தி 16 Dec 2018 11:00 PM GMT (Updated: 16 Dec 2018 9:00 PM GMT)

பாகிஸ்தானில் 15 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனையை ராணுவ தளபதி உறுதி செய்தார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட 15 பயங்கரவாதிகளுக்கு ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனையை அந்த நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா நேற்று உறுதி செய்தார்.

பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் ராணுவ கன்டோன்மென்ட் பகுதிக்கு வெளியே கிறிஸ்தவ காலனி உள்ளது.

அங்கு கடந்த 2016-ம் ஆண்டு தற்கொலைப்படை பயங்கரவாதிகள் 4 பேர் தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் உள்ளூர்வாசி ஒருவர் கொல்லப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேரையும் சுற்றி வளைத்து சுட்டுக்கொன்றனர்.

இதனால் அந்த கிறிஸ்தவ காலனியில் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான ‘தி ஜமாத் உர் அக்ரார்’ பொறுப்பேற்றது. இது பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்துவதற்கு தூண்டுகோலாக இருந்தவர், ‘தி ஜமாத் உர் அக்ரார்’ அமைப்பை சேர்ந்த இப்ரார் என தெரியவந்தது.

இவர்தான் தாக்குதல் நடத்துவதற்கான ஆயுதங்களையும், போக்குவரத்து வசதியையும், இன்ன பிற வசதிகளையும் பயங்கரவாதிகளுக்கு வழங்கியதும் அம்பலத்துக்கு வந்தது.

இத்துடன் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் மொத்தம் 34 பேரை கொன்று குவித்ததில் தொடர்புடைய 35 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது அந்த நாட்டில் உள்ள ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது, குற்றவாளிகள் அனைவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களில் 15 பேருக்கு மரண தண்டனையும், எஞ்சியவர்களுக்கு சிறைத்தண்டனையும் வழங்கி ராணுவ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

பாகிஸ்தான் சட்டப்படி, ராணுவ கோர்ட்டில் பயங்கரமான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கிறபோது, அதை ராணுவ தளபதி உறுதி செய்ய வேண்டும் என்பது நடைமுறை ஆகும்.

அதன்படி ராணுவ கோர்ட்டால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 15 பேரின் மரண தண்டனையை உறுதி செய்து ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

இதை ராணுவ ஊடகப்பிரிவான ஐ.எஸ்.பி.ஆர். ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட கைதிகளின் பெயர் விவரம், அவர்கள் எந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.

பாகிஸ்தானில் ஒரே நேரத்தில் 15 பயங்கரவாதிகளின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story