இலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கே மீண்டும் பதவி ஏற்றார் - அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்ததற்கு இந்தியா வரவேற்பு


இலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கே மீண்டும் பதவி ஏற்றார் - அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்ததற்கு இந்தியா வரவேற்பு
x
தினத்தந்தி 16 Dec 2018 11:30 PM GMT (Updated: 16 Dec 2018 9:21 PM GMT)

இலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கேவுக்கு அதிபர் சிறிசேனா நேற்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம், அங்கு நிலவிய அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்ததற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்து உள்ளது.

கொழும்பு,

இலங்கையில் பிரதமராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பல எதிர்பாராத திருப்பங்களுக்கு காரணமாக அமைந்தது. கடந்த அக்டோபர் மாதம் 26-ந் தேதி பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரமசிங்கேயை நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபச்சேயை புதிய பிரதமராக சிறிசேனா நியமித்ததற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இதை சமாளிக்க நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு புதிதாக தேர்தல் நடத்த சிறிசேனா உத்தரவிட்டார். அவரது இந்த நடவடிக்கை சட்டவிரோதம் என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு, ராஜபக்சேயும், அவரது மந்திரிசபையும் செயல்பட தடை விதித்தது. இதனால் நெருக்கடி அதிகரித்ததால் ராஜபக்சே நேற்று முன்தினம் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

இதைத்தொடர்ந்து, ரனில் விக்ரமசிங்கே ஞாயிற்றுக்கிழமை புதிய பிரதமராக பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இலங்கை பிரதமராக 69 வயதான ரனில் விக்ரமசிங்கே நேற்று மீண்டும் பதவி ஏற்றார். அவருக்கு அதிபர் சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக இலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டதற்கான கடிதத்தை அவரிடம் சிறிசேனா வழங்கினார். பதவி ஏற்பு நிகழ்ச்சி எளிமையாக நடந்தது.

ரனில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவி ஏற்றதை தொடர்ந்து, இலங்கையில் கடந்த 51 நாட்களாக நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது.

பிரதமராக பதவி ஏற்ற பின் ரனில் விக்ரமசிங்கே நிருபர்களிடம் பேசுகையில், இன்று பிரதமராக நான் பதவி ஏற்றது தனக்கோ அல்லது ஐக்கிய தேசிய கட்சிக்கோ கிடைத்த வெற்றி அல்ல என்றும், இது இலங்கையின் ஜனநாயக அமைப்புகளுக்கும், இறையாண்மைக்கும் கிடைத்த வெற்றி என்றும் கூறினார். நெருக்கடியான சூழ்நிலையில் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் உறுதியாக நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அப்போது அவர் கூறினார்.

பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவி ஏற்றது பற்றி கருத்து தெரிவித்த மத்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்ததை வரவேற்பதாக கூறினார்.

இந்தியா-இலங்கை இடையேயான உறவுகள் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்லும் என நம்புவதாகவும், இலங்கையில் மக்கள் நல திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.


Next Story