ஏமன்: அறிவித்த சில நிமிடங்களில் முறிந்தது போர் நிறுத்த ஒப்பந்தம்


ஏமன்: அறிவித்த சில நிமிடங்களில் முறிந்தது போர் நிறுத்த ஒப்பந்தம்
x
தினத்தந்தி 18 Dec 2018 4:18 AM GMT (Updated: 18 Dec 2018 4:18 AM GMT)

ஏமன் போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவித்த சில நிமிடங்களிலேயே முறிந்ததாக அரசாங்க தரப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.


ஏமன் நாட்டின் மிக முக்கிய நகரமான ஹூடைடா நகரம் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனை மீட்பதற்காக அந்த நகரை அரசுப் படையினர் சுற்றிவளைத்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை வான்வழித் தாக்குதல் நடத்தி வந்தது.

இதன் காரணமாக ஏராளமானோர் பலியானதோடு, முற்றுகை காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டது.அதையடுத்து, ஏமன் விவகாரங்களுக்கான ஐ.நா. சிறப்புத் தூதர் மார்ட்டின் கிரிபித்ஸின் முயற்சியின் பலனாக, இரு தரப்பினருக்கும் இடையே சுவீடனில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் கடந்த வியாழக்கிழமை உடன்பாடு எட்டப்பட்டது.அதன்படி, சண்டை நடைபெற்று வந்த ஹுடைடா நகரில் போர் நிறுத்தம் மேற்கொள்ள இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த சில நிமிடங்களிலேயே முறிந்ததாக அரசு ஆதரவு அதிகாரி  ஒருவர் கூறினார்.  உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் துறைமுக நகரமான ஹுடைடாவில் போர் நிறுத்தம் செய்வது என்று ஹூதி கிளர்ச்சியாளர்களும், அரசாங்கத் தரப்பும் ஒப்புக்கொண்டன.

ஹுடைடா துறைமுகம் நிவாரணப் பொருள்கள் செல்வதற்கான நுழைவாயிலாக இருக்கிற முக்கியத்துவம் வாய்ந்த நகரம். ஆனால், சண்டை நிறுத்தம் தொடங்கிய உடனேயே இந்த நகரில் ஆங்காங்கே மோதல்கள் நிகழ்ந்தன என்று அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கிழக்கு ஹுடைடாவில் அரசாங்கப் படைகள் மீது கிளர்ச்சியாளர்கள் ஷெல் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Next Story