நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் துளசி கிரி காலமானார்


நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் துளசி கிரி காலமானார்
x
தினத்தந்தி 18 Dec 2018 10:36 AM GMT (Updated: 18 Dec 2018 10:36 AM GMT)

நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் மற்றும் மூத்த அரசியல்வாதியான துளசி கிரி இன்று காலமானார்.

காத்மண்டு,

நேபாளத்தின் காத்மண்டு நகரில் புத்தநீல்கந்தம் என்ற பகுதியில் முன்னாள் பிரதமரான துளசி கிரி வசித்து வந்துள்ளார்.  அவருக்கு கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து அவர் சிகிச்சை முடிந்து திரும்பினார்.

இந்நிலையில், உடல்நல குறைவால் இன்று அவர் காலமானார்.  அவருக்கு வயது 93.  கடந்த 1926ம் ஆண்டு பிறந்த இவர் நேபாளி காங்கிரஸ் கட்சியில் இருந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்.

கடந்த 1962ம் ஆண்டு மந்திரிகள் குழுவின் துணை தலைவராக கிரி, அரசர் மகேந்திர ஷாவால் நியமிக்கப்பட்டார்.  இதன்பின்னர் நாட்டின் பிரதமராக இரு முறை அவர் பதவி வகித்து உள்ளார்.  பஞ்சாயத்து நடைமுறை ஒழிக்கப்பட்ட பின்னர் அவர் நாட்டை விட்டு வெளியேறி இலங்கையில் வசிக்க தொடங்கினார்.

அதன்பின் 2001ம் ஆண்டில் அரச பரம்பரை படுகொலைக்கு பின்னர் ஞானேந்திர ஷா அரசரானார்.  அவரது அமைச்சரவையின் துணை தலைவராக (பிரதமருக்கு இணையான பதவி) கிரி நியமனம் செய்யப்பட்டார்.

கிரிக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.  இவரது மரணத்திற்கு நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒளி, முன்னாள் பிரதமர் மற்றும் நேபாளி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷேர் பகதூர் தூபா மற்றும் பிற மூத்த அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story