ராஜபக்சே இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரானார்: தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு


ராஜபக்சே இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரானார்: தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு
x
தினத்தந்தி 18 Dec 2018 11:15 PM GMT (Updated: 18 Dec 2018 9:19 PM GMT)

ராஜபக்சே இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவரானார். இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கொழும்பு,

இலங்கை அதிபர் சிறிசேனா பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, ராஜபக்சேவை அப்பதவியில் நியமித்தார். இதனால் கடந்த 2 மாதங்களாக இலங்கையில் அரசியல் நெருக்கடி நிலவியது. இந்நிலையில் தனக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லாததால், ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ரனில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமர் ஆனார்.

இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா, ராஜபக்சேவை நாடாளுமன்றத்தின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்தார். 2015-ம் ஆண்டில் இருந்து முக்கிய தமிழ் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.சம்பந்தன் இந்த பதவியில் இருந்துவந்தார்.

ராஜபக்சேவின் நியமனத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன், இலங்கை முஸ்லிம் காங்கிரசின் ரவுப் ஹக்கீம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜபக்சே 2015-ம் ஆண்டு ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவர் இலங்கை மக்கள் கட்சி உறுப்பினராக உள்ளார். எனவே அவரை எம்.பி. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

அதற்கு சபாநாயகர் கரு ஜெயசூரியா, உங்கள் புகாரை எழுத்துமூலம் தெரிவியுங்கள். அதுபற்றி தேர்வுக்குழு ஆய்வு செய்யும் என்றார்.


Next Story