அமெரிக்காவில் வெளிநாடுகளை சேர்ந்த கணவன், மனைவி வேலை பார்ப்பதில் சிக்கல் - விசா வழக்கில் கோர்ட்டு அடுத்த மாதம் விசாரணை


அமெரிக்காவில் வெளிநாடுகளை சேர்ந்த கணவன், மனைவி வேலை பார்ப்பதில் சிக்கல் - விசா வழக்கில் கோர்ட்டு அடுத்த மாதம் விசாரணை
x
தினத்தந்தி 19 Dec 2018 11:30 PM GMT (Updated: 19 Dec 2018 10:08 PM GMT)

அமெரிக்காவில் ‘எச்-4’ விசா பிரச்சினையால், வெளிநாடுகளை சேர்ந்த கணவன், மனைவி இருவரும் வேலை பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்த வழக்கில் அடுத்த மாதம் (ஜனவரி) விசாரணை நடைபெறுகிறது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்கிற வெளிநாட்டினருக்கு ‘எச்-1பி’ விசா வழங்கப்படுகிறது. இந்த விசாஆற்றல் வாய்ந்த தகவல் தொழில் நுட்பத்துறையினருக்கு அதிகளவில் கிடைக்கிறது. குறிப்பாக இந்தியர்களுக்கு அதிகமாக கிடைத்து வருகிறது.

இந்த ‘எச்-1பி’ விசா பெற்று சென்று, அமெரிக்காவில் வேலை செய்கிற ஆண்களின் மனைவிக்கும், பெண்களின் கணவருக்கும் ‘எச்-4’ விசா கொடுத்து, அங்கேயே வேலை பார்க்கும் திட்டத்தை ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, 2015-ம் ஆண்டு கொண்டு வந்தார்.

இந்த திட்டம் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.

ஆனால் ‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்ற மண்ணின் மைந்தன் கொள்கையில் தீவிரமாக உள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்த திட்டத்தை ரத்து செய்து விட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்த திட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி ‘சேவ் ஜாப்ஸ் அமெரிக்கா’ என்ற அமைப்பு அங்குள்ள மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த அந்த கோர்ட்டு, ஒபாமா கொண்டு வந்த ‘எச்-4’ விசா திட்டம் செல்லுபடியாகும் என தீர்ப்பு அளித்தது.

ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து ‘சேவ் ஜாப்ஸ் அமெரிக்கா’ அமைப்பு, அப்பீல் கோர்ட்டில் (கொலம்பியா மாவட்டம்) மேல் முறையீடு செய்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, எச்-4 விசா திட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கோர்ட்டில் டிரம்ப் நிர்வாகம் 3 முறை அறிவித்தது. ஆனால் இது குறித்த முறையான அறிவிப்பை டிரம்ப் நிர்வாகம் இன்னும் வெளியிடவில்லை. இதனால் அந்த வழக்கு கிடப்பில் உள்ளது.

ஆனால் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை தனது வருடாந்திர செயல்திட்டத்தில், “எச்-4 விசா வைத்திருப்போரில் குறிப்பிட்ட பிரிவினருக்கு வேலை அங்கீகாரத்தை திரும்பப்பெறுவதில் உறுதியாக உள்ளோம்” என குறிப்பிட்டுள்ளது. மேலும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை இந்த மாதம் வெளியிடப்படும் என கூறி உள்ளது.

இந்த நிலையில், கிடப்பில் போடப்பட்டுள்ள ‘எச்-4’ விசா வழக்கு விசாரணையை தொடங்க வேண்டும் என்று ‘சேவ் ஜாப்ஸ் அமெரிக்கா’ அமைப்பு, அப்பீல் கோர்ட்டில் இந்திய வம்சாவளி நீதிபதி சீனிவாசன் உள்ளிட்டவர்களை கொண்ட 3 நீதிபதிகள் அமர்வில் முறையிட்டது.

அப்போது, “ இந்த வழக்கில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தாமதிக்கிற நீதி மறுக்கப்பட்ட நீதி ஆகும். இந்த வழக்கை நிறுத்தி வைத்திருப்பது, வேலைச்சந்தையில் அமெரிக்கர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும்” என குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில் மேல்முறையீட்டு வழக்கு முடக்கத்தை நீக்கி அப்பீல் கோர்ட்டு கடந்த 17-ந் தேதி உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி வழக்கின் விசாரணை, அடுத்த மாதம் (ஜனவரி) 16-ந் தேதி நடக்க உள்ளது. அந்த நாளில் மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்துள்ள ‘சேவ் ஜாப்ஸ் அமெரிக்கா’ அமைப்பு தனது வாதத்தை முன்வைக்க வேண்டும்.

இந்த வழக்கில் டிரம்ப் நிர்வாகம் தனது தரப்பு கருத்தை தெரிவிக்க பிப்ரவரி மாதம் 22-ந் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ‘இம்மிகிரேசன் வாய்ஸ்’ அமைப்பு தன்னை ஒரு தரப்பாக இணைத்துக்கொள்வதற்கும் கேட்டு அனுமதி அளித்துள்ளது.

இந்த அமைப்பு, திறன்வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்களுக்கு ஆதரவான அமைப்பு ஆகும். இந்த அமைப்பையும் ஒரு தரப்பாக இணைத்துக்கொள்ள அப்பீல் கோர்ட்டு அனுமதி அளித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த பிரச்சினையில் எச்-4 விசா தாரர்களின் வேலை காப்பாற்றப்பட வேண்டுமானால் அது கோர்ட்டு தீர்ப்பில்தான் அடங்கி இருக்கிறது. ஒரு வேளை கோர்ட்டு தீர்ப்பு எதிராக அமைந்து விட்டால், இது இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.



Next Story