இந்தியா - சீனா உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது: சீன அதிபர் ஜி ஜிங்பிங்


இந்தியா - சீனா உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது: சீன அதிபர் ஜி ஜிங்பிங்
x
தினத்தந்தி 22 Dec 2018 3:34 AM GMT (Updated: 22 Dec 2018 3:34 AM GMT)

சீனா-இந்தியா இடையேயான நல்லுறவு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் மூலமாக முன்னேற்றப் பாதையில் செல்வதாக சீன அதிபர் ஷி ஜி ஜிங்பிங் தெரிவித்தார்.

பெய்ஜிங்,

சீனா - இந்தியா ஆகிய இரு நாட்டு வெளியுறவுத் துறை மந்திரிகள் டெல்லியில் நேற்று சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்ததற்கு வாழ்த்து தெரிவித்து சீன அதிபர் ஜி ஜிங்பிங் கூறியதாவது:- “ சீனா மற்றும் இந்தியாவின் பண்டைய நாகரிகமானது, நீண்ட வரலாறு மற்றும் சிறப்பான பெருமைகளைக் கொண்டதாகும். அந்த இரு நாகரிகங்களுமே பண்டைய காலத்தில் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர கற்றல்கள் மூலமாக மனித இன மேம்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்துள்ளன.

தற்போது, ஆழமான பரஸ்பர அரசியல் நம்பிக்கை, நடைமுறை அளவில் அதிகரித்துவரும் ஒத்துழைப்புகள், கலாசாரம் மற்றும் மக்களிடையேயான பரிமாற்றம், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலமாக சீனா-இந்தியா இடையேயான உறவானது முன்னேற்றப் பாதையில் நகர்கிறது.

இதன் மூலம், இரு தரப்பு நல்லுறவானது சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகத்துக்கும் பலனளிக்கக் கூடியது என்பது நடைமுறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த உயர்நிலை இருதரப்பு பேச்சுவார்த்தையை இரு நாடுகளும் முறையாகப் பயன்படுத்தும் என்று நம்புகிறேன்” இவ்வாறு அவர் கூறியதாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Next Story