ஈரானில் கடன் வாங்க போலி ஆவணம் பயன்படுத்திய பிரபல தொழில் அதிபர் தூக்கிலிடப்பட்டார்


ஈரானில் கடன் வாங்க போலி ஆவணம் பயன்படுத்திய பிரபல தொழில் அதிபர் தூக்கிலிடப்பட்டார்
x
தினத்தந்தி 23 Dec 2018 11:30 PM GMT (Updated: 23 Dec 2018 9:10 PM GMT)

ஈரானில் போலி ஆவணம் பயன்படுத்தி கடன் வாங்கியதாக, பிரபல தொழில் அதிபர் தூக்கில் போடப்பட்டார்.

டெக்ரான்,

ஈரான் நாட்டின் பிரபல தொழில் அதிபர் ஹமித்ரேசா பக்கெரி தர்மனி (வயது 49). இவர் ‘பிட்டுமென் சுல்தான்’ என்ற செல்லப்பெயரால் அழைக்கப்பட்டு வந்தார்.

இவர் கடன் பெறுவதற்காக போலி ஆவணங்களை தயாரித்து அளித்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

‘ஆஸ்பால்ட்’ என்று அழைக்கப்படுகிற நிலக்கீல் தயாரிக்க பயன்படுகிற ‘பிட்டுமென்’ என்ற பொருளை விற்பனை செய்வது ஈரானின் லாபகரமான தொழில். இந்த ‘பிட்டுமென்’னை கொள்முதல் செய்வதற்காகத்தான் அவர் கடன்பெற போலி ஆவணங்கள் தயாரித்து அளித்திருக்கிறார்.

இந்த புகாரின்பேரில் இவர் கடந்த 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

100 மில்லியன் டாலர் (சுமார் ரூ.700 கோடி) மதிப்பிலான ‘பிட்டுமென்’னை, அவர் மோசடி செய்தும், லஞ்சம் கொடுத்தும் கடன்பெற்று கொள்முதல் செய்துள்ளார் என்பது குற்றச்சாட்டு. இந்த வழக்கின் விசாரணை ஈரான் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பானது. அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இப்போது அவர் தூக்கில் போடப்பட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய கூடுதல் தகவல் தெரிய வரவில்லை.

ஈரானில் கடந்த மாதம் 2 டன் அளவுக்கு தங்க நாணயங்களை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் நாணய சுல்தான் என அழைக்கப்பட்ட தொழில் அதிபர் ஒருவர் தூக்கில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story