ஈராக்கிற்கு திடீர் பயணம் மேற்கொண்ட டொனால்டு டிரம்ப்


ஈராக்கிற்கு திடீர் பயணம் மேற்கொண்ட டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 27 Dec 2018 4:29 AM GMT (Updated: 27 Dec 2018 4:29 AM GMT)

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், முன்னறிவிப்பின்றி ஈராக்கிற்கு திடீர் பயணம் மேற்கொண்டார்.

பாக்தாத், 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், திடீர் பயணமாக ஈராக் சென்றார். அதிபராக பதவியேற்ற பின்பு டிரம்ப், ஈராக் செல்வது இதுதான் முதல் முறையாகும்.  உள்ளூர் நேரப்படி,  இரவு 7.16 மணியளவில், மேற்கு ஈராக்கில் உள்ள அல் அசாத் விமான தளத்திற்கு அதிபர் டிரம்பின் விமானம் தரையிறங்கியது. 

அமெரிக்க மற்றும் ஈராக் கூட்டுப்படைகளின் விமான தளமான அங்கு டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அமெரிக்க ராணுவ தலைவர்கள் மற்றும் வீரர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். 
வீரர்களின் சிறப்பான பணிகளை பாராட்டியதுடன், அவர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை டிரம்ப் தெரிவித்தார். அத்துடன் வீரர்களுடன் புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தார். 

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவது தொடர்பாக முடிவு எடுத்த பின்னர் ஈராக்கிற்கு டிரம்ப் திடீர் பயணம் மேற்கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

முன்னதாக தன்னுடன் பயணம் செய்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறும் திட்டம் எதுவும் இல்லை என கூறினார். மேலும், தேவைப்பட்டால், ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீது மிகவும் ஆக்ரோஷமாகாவும், வேகமாகவும் தாக்குதல் நடத்தப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்தார். 


Next Story