இந்தோனேசியாவில் மீண்டும் எரிமலை வெடிக்கும் ஆபத்து அதிகரித்துள்ளது என எச்சரிக்கை


இந்தோனேசியாவில் மீண்டும் எரிமலை வெடிக்கும் ஆபத்து அதிகரித்துள்ளது என எச்சரிக்கை
x
தினத்தந்தி 27 Dec 2018 11:55 AM GMT (Updated: 27 Dec 2018 11:55 AM GMT)

இந்தோனேசியாவில் சுனாமி பாதிப்பு ஏற்படுத்திய எரிமலை மீண்டும் வெடிக்கும் ஆபத்து அதிகரித்துள்ளது என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

காரிடா,

இந்தோனேசியாவில் கடந்த சனிக்கிழமை இரவு எரிமலை வெடிப்பால் சுனாமி ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்தியது. அங்கு ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே ஜாவா கடலை, இந்தியப்பெருங்கடலுடன் இணைக்கிற சுந்தா ஜலசந்தி உள்ளது. அந்த ஜலசந்தியில் அமைந்துள்ள அனக் கிரகட்டோவா எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலச்சரிவால் ராட்சத சுனாமி அலைகள் எழுந்தன. இந்த பேரலைகள் அந்த நாட்டில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளன.

சுமத்ரா தீவில் செராங் மாவட்டம், தெற்கு லாம்பங், டாங்கமஸ் ஆகிய இடங்களில் பெருத்த உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சுனாமி பேரலைகளில் கட்டிடங்களுடன் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்களும் அடித்துச்செல்லப்பட்டன.

சுனாமி பற்றி எந்த முன்னெச்சரிக்கையும் விடப்படவில்லை.  பல மரங்கள் வேருடன் சாய்ந்தன.  சாலைகளில் அவை விழுந்து போக்குவரத்தில் பாதிப்பினை ஏற்படுத்தின.  ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து அகதிகளாக தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அனக் கிரகட்டோவா எரிமலையை சுற்றி 5 கி.மீட்டர் தொலைவுக்கு யாரும் போக வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  இதற்கு முன் இந்த எச்சரிக்கை 2 கி.மீட்டர் என இருந்தது.

இதேபோன்று கடலோர பகுதியில் இருந்து குடியிருப்புவாசிகளை வேறு இடங்களுக்கு செல்லும்படியும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.  இந்த பகுதி வழியே செல்லும் விமானங்கள் வேறு வழியில் செல்வதற்கும் விமான துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

இந்த எரிமலையில் இருந்து சாம்பல் புகை, வெப்ப வாயு மற்றும் பிற எரிமலை பொருட்கள் வானுயர பரவியுள்ளது.  இதுபற்றி தேசிய பேரிடர் முகமையின் செய்தி தொடர்பு அதிகாரி பர்வோ நுக்ரஹோ, இன்னும் அதிக முறை எரிமலை வெடிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது என கூறியுள்ளார்.  இதனால் மீண்டும் சுனாமி பாதிப்பு ஏற்பட கூடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

Next Story