வங்காளதேச தேர்தலில் வன்முறை: ஷேக் ஹசினா மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?


வங்காளதேச தேர்தலில் வன்முறை: ஷேக் ஹசினா மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?
x
தினத்தந்தி 30 Dec 2018 11:15 PM GMT (Updated: 30 Dec 2018 7:27 PM GMT)

வங்காளதேச தேர்தலில் ஏற்பட்ட வன்முறையில் 16 பேர் பலியாகினர். ஷேக் ஹசினா, அங்கு மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

டாக்கா,

வங்காளதேசத்தில் அவாமி லீக் கட்சியின் தலைவரான ஷேக் ஹசினா (வயது 71) பிரதமராக உள்ளார். அவர் தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் பதவியைப் பிடித்து விடும் கனவில் உள்ளார்.

அங்கு 300 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு டிசம்பர் 30-ந் தேதி (நேற்று) தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான வங்காளதேச தேசிய கட்சியின் (பி.என்.பி.) தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருவதால், அவர் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தேசிய ஐக்கிய முன்னணி என்ற பெயரிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கு புகழ் பெற்ற வக்கீலான கமால் உசேன் (81) தலைமை தாங்குகிறார்.

இந்த நிலையில் 300 இடங் களை கொண்ட நாடாளுமன்றத்தில், 299 இடங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 1,848 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது.

வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 40 ஆயிரத்து 183 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தேர்தலில் போலீசார், ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் என 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும் வாக்குப்பதிவின்போது வதந்திகளை பரப்பி விடக்கூடாது என்பதற்காக அதிவேக இணையதள சேவை முடக்கப்பட்டது. ஒரு தனியார் டி.வி.யின் ஒளிபரப்பும் முடக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 4 மணிக்கு முடிந்தது. வாக்குச்சாவடிகளாக மாற்றப்பட்டிருந்த கல்லூரிகளிலும், பள்ளிக் கூடங்களிலும் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

டாக்காவில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் பிரதமர் ஷேக் ஹசினா, முதல் வாக்காளராக வந்து ஓட்டுப்பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசும்போது, “தேர்தல்களில் எங்கள் கட்சியின் வெற்றி குறித்து நான் எப்போதுமே நம்பிக்கை கொண்டுள்ளேன். தங்களது சிறப்பான எதிர்காலத்துக்காக மக்கள் எங்களையே மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள்” என்று கூறினார்.

வங்காளதேசத்தில் பரவலாக பல இடங்களிலும் தேர்தல் தொடர்பான வன்முறைச்சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் வந்தபடியே உள்ளன. கடைசியாக கிடைத்த தகவல்கள், அங்கு தேர்தல் வன்முறையில் 16 பேர் பலியானதாகவும், டஜன் கணக்கிலானவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறுகின்றன.

ஆளும் அவாமி லீக் கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவர் ஒருவரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவார். நர்சிங்டி என்ற இடத்தில் ஆளும் கட்சியின் தேர்தல் ஏஜெண்டு கொல்லப்பட்டார்.

தீனஜ்பூர் என்ற இடத்தில் அவாமி லீக் கட்சியினருக்கும், வங்காளதேச தேசியக்கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது வாக்காளர் ஒருவர் பலியானார்.

நோவாக்கலி என்ற இடத்தில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

வன்முறைகளுடன் நடந்துள்ள இந்த தேர்தலில் ஆளும் அவாமி லீக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று, ஷேக் ஹசினா தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் நாற்காலியில் அமர்வதற்கான வாய்ப்பு அதிகம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


Next Story