இந்தியாவின் ஜிடிபி 7.3 சதவீதமாக உயரும் என எதிர்பார்ப்பு: உலக வங்கி கணிப்பு


இந்தியாவின் ஜிடிபி 7.3 சதவீதமாக உயரும் என எதிர்பார்ப்பு: உலக வங்கி கணிப்பு
x
தினத்தந்தி 9 Jan 2019 4:45 AM GMT (Updated: 9 Jan 2019 4:55 AM GMT)

இந்தியாவின் ஜிடிபி 7.3 சதவீதமாக உயரும் என உலக வங்கி கணித்துள்ளது.

வாஷிங்டன்,
 
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2018-19 நிதி ஆண்டில் 7.3 சதவீதமாக அதிகரிக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது. அடுத்த இரண்டு நிதி ஆண்டுகளுக்கு 7.5 சதவீதமாக இதன் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தொடர்ந்து பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி தற்போது வரை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2019 மற்றும் 2020 ம் ஆண்டுகளில் 6.2 சதவீதமாக சரிவடையும். 2021 ல் இது 6 சதவீதமாக குறையும். 

2017- ல் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமல் ஆகியவற்றால் இந்தியாவின் பொருளாதாரம் சரிவடைந்தது. 2017 ல் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாகவும், இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவீதமாகவும் இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் முதலீடுகள் மற்றும் கொள்முதல்கள் அதிகரித்துள்ளதால் பொருளாதார வளர்ச்சி உயரும். தொழில் வளர்ச்சியில் இந்தியா குறிப்பிடப்படும்படியாக இடத்தை எட்டி உள்ளது. ஜிஎஸ்டி அமல் தற்போது இந்திய முதலீட்டை பலப்படுத்தி உள்ளது. வளர்ச்சிக்கும் இது முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி ஆட்சியின் கீழ் இந்தியாவின் பொருளாதார செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பது குறித்து கருத்து கூற மறுத்துவிட்ட உலக வங்கி அதிகாரிகள், வளர்ந்து வரும் பிற நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக உள்ளதாக தெரிவித்தனர்.  ஒவ்வொரு வருடமும் இந்தியா வளர்ச்சி ஆற்றல் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும்  அதிகாரிகள் குறிப்பிட்டனர். 

Next Story