மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப ரூ.40 ஆயிரம் கோடி தேவை - அமெரிக்க மக்களிடம் தொலைக்காட்சி மூலம் டிரம்ப் பேச்சு


மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப ரூ.40 ஆயிரம் கோடி தேவை - அமெரிக்க மக்களிடம் தொலைக்காட்சி மூலம் டிரம்ப் பேச்சு
x
தினத்தந்தி 9 Jan 2019 11:30 PM GMT (Updated: 9 Jan 2019 9:28 PM GMT)

நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப ரூ.40 ஆயிரம் கோடி தேவைப்படுவதாக தெரிவித்தார்.

வாஷிங்டன்,

அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவதற்காக உள்நாட்டு நிதியில் 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.35 ஆயிரம் கோடி) ஒதுக்கும்படி ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்தை வலியுறுத்தினார்.

இதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்றத்தில் செலவின மசோதா நிறைவேறாமல் போனது. இதன் காரணமாக வெளியுறவு, உள்நாட்டு பாதுகாப்பு, போக்குவரத்து, விவசாயம், நீதித்துறை உள்ளிட்ட 9 துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்காமல் அந்த துறைகள் முடங்கின.

இந்த விவகாரத்தில் டிரம்பும், ஜனநாயக கட்சியினரும் தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் அரசு துறைகள் முடக்கம் 3 வாரங்களை கடந்து நீடிக்கிறது. இதனால் அரசு ஊழியர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

எனவே அரசு துறைகள் முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக டிரம்ப் தனது பிடிவாதத்தை சற்று தளர்த்தி, மெக்சிகோ எல்லையில் கான்கிரீட்டில் சுவர் எழுப்புவதற்கு பதிலாக குறைந்த செலவில் இரும்பு சுவர் அமைக்கலாம் என முடிவு செய்திருப்பதாக அறிவித்தார்.

எனினும் ஜனநாயக கட்சியினர் டிரம்பின் இந்த முடிவையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் சாதகமான சூழல் அமையாவிட்டால் அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனம் செய்ய நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் முதல் முறையாக வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இருந்து தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் ஜனாதிபதி டிரம்ப் உரையாற்றினர். இந்த உரையாடல் 10 நிமிடம் நீடித்ததாக அமெரிக்க ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிரம்ப் பேசியதாவது:-

நமது தெற்கு எல்லையில் (மெக்சிகோ எல்லை) மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் நெருக்கடி நிலவுகிறது. கட்டுப்படுத்த முடியாத சட்டவிரோத குடியேறிகளின் வருகையால் அமெரிக்க பிரஜைகள் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் சட்டவிரோத குடியேறிகளால் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு உடனடி தீர்வு காணாவிட்டால் மேலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படலாம்.

மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப 5.7 பில்லயன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரம் கோடி) வேண்டுமென எல்லை பாதுகாப்புபடை மற்றும் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்கிறார்கள். அதனை உடனே கொடுக்க வேண்டும். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைமைக்கு அழைப்பு விடுத்துள்ளேன். இந்த விவாகரத்தில் அரசியல் பாகுபாடு இன்றி நாம் செயல்படுவோம் என நம்பிக்கை கொண்டுள்ளேன்.

ஜனநாயக கட்சியினர் முந்தைய காலங்களில் எல்லை சுவர் திட்டத்தை ஆதரித்துள்ளனர். நான் ஜனாதிபதி ஆனதும் அவர்கள் தங்களின் மனநிலையை மாற்றிக்கொண்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

டிரம்ப் உரையாடல் ஒளிபரப்பான அடுத்த சில நிமிடங்களில் ஜனநாயக கட்சியினர் தொலைக்காட்சிகளில் தோன்றி டிரம்ப் பேச்சுக்கு பதில் அளித்தனர்.

செனட் சபை சிறுபான்மை பிரிவு தலைவரான சக் சும்மர் பேசுகையில், “ஜனாதிபதியே, முதலில் அரசு முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள். எல்லை சுவர் விவகாரத்தில் நம்முடைய கருத்து வேறுபாடுகளை பேசி சரி செய்துகொள்ளலாம்” என்றார்.


Next Story