மெக்சிகோ நாட்டில் எண்ணெய் குழாய் வெடித்து பயங்கர தீ விபத்து - பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு


மெக்சிகோ நாட்டில் எண்ணெய் குழாய் வெடித்து பயங்கர தீ விபத்து - பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு
x
தினத்தந்தி 19 Jan 2019 11:15 PM GMT (Updated: 19 Jan 2019 7:35 PM GMT)

மெக்சிகோ நாட்டில் எண்ணெய் குழாய் வெடித்து நேரிட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்தது.

மெக்சிகோ,

மெக்சிகோ நாட்டில் குழாய் வழியாக பெட்ரோல் எடுத்துச் செல்லப்படுகிறது.

அங்கு இந்த குழாய்களை உடைத்து பெட்ரோல் திருடுவது என்பது வழக்கமாக நடைபெற்று வருகிற குற்றச்செயலாக அமைந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டில் 2 பில்லியன் டாலர் (சுமார் ரூ.21,300 கோடி) மதிப்பிலான பெட்ரோல் இப்படி களவாடப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுகிற நிலையில் இந்த பெட்ரோல் திருட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திட்டங்களை அந்த நாட்டு அரசு தீட்டி வந்தது.

இந்த நிலையில் அங்கு ஹிடால்கோ மாகாணத்தில் டலாகியூலில்பான் என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு பெட்ரோல் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பெட்ரோல் வெளியே ஆறாக பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியது.

இது குறித்த தகவல் அங்கு காட்டுத்தீயைப் போல பரவியது. உடனே மக்கள் வாளிகளையும், கேன்களையும் எடுத்துக்கொண்டு பெட்ரோலை வாரிக்கொண்டு வர சென்றனர். பலர் இப்படி பெட்ரோலை கேன்களிலும், வாளிகளிலும் எடுத்துக்கொண்டு வந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் குழாயில் தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென பரவி, கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது.

இதில் ஏராளமான மக்கள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் அதில் இருந்து எப்படி வெளியே வருவது என தெரியாமல் ஓலமிட்டனர். எங்கு பார்த்தாலும் பரிதவிப்பு நிலவியது. இது குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர்.

தீயில் கருகி 20 பேர் பலிதானதாக முதலில் தகவல் வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. அவர்களின் உடல்கள், அடையாளம் காண முடியாத அளவுக்கு கரிக்கட்டைகள் போல மாறி விட்டன.

தீக்காயங்களுடன் கதறிக்கொண்டிருந்த 76 பேரை மீட்புப்படையினர் மீட்டு ஆம்புலன்சுகள் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் உடனே வெளியாகி தீவிரமாக பரவின.

ஏராளமான தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்றன. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதை இந்த நாட்டின் பாதுகாப்பு மந்திரி அல்போன்சா தெரிவித்தார்.

சம்பவத்தை நேரில் பார்த்த பெர்னாண்டோ கார்சியா என்பவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசுகையில், “என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக நான் அங்கு சென்றேன். அப்போதுதான் பெரிய அளவில் வெடிச்சத்தம் கேட்டது. தீப்பிடித்தது. நான் மக்களுக்கு உதவுவதற்கு விரைந்தேன்” என்று குறிப்பிட்டார்.

சம்பவ இடத்துக்கு அந்த நாட்டின் அதிபர் மேனுவல் லோபஸ் ஓப்ரடார் நேற்று அதிகாலை விரைந்தார். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரை கண்டு ஆறுதல் கூறினார்.

இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “பெட்ரோல் குழாயில் கசிவு ஏற்பட்டபோது நேரிட்ட தீ விபத்தில் ஏராளமான மக்கள் சிக்கி பாதிப்புக்கு ஆளாகி இருப்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த மக்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்யுமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.



Next Story