சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் வீட்டில் வெடிகுண்டு என புரளி; இந்திய வம்சாவளி சிறையில் அடைப்பு


சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் வீட்டில் வெடிகுண்டு என புரளி; இந்திய வம்சாவளி சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 22 Jan 2019 1:33 PM GMT (Updated: 22 Jan 2019 1:33 PM GMT)

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் வீட்டில் வெடிகுண்டு என புரளி கிளப்பிய இந்திய வம்சாவளி நபர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிங்கப்பூர்,

சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த பின் முதல் பிரதமரானவர் லீ குவான் யூ.  கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 13ந்தேதி இவரது வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள தொலைபேசி பூத் ஒன்றில் இருந்து பேசிய நபர் கூறினார்.

இதனை தொடர்ந்து உடனடியாக காரில் அங்கு சென்ற ரோந்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.  அதேவேளையில், லீயின் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகளிடம், ரோந்து பணிகளை தீவிரப்படுத்தும்படியும், எச்சரிக்கையுடனும், கண்காணிப்புடனும் இருக்கும்படி கூறப்பட்டது.

அவரிடம் நடந்த விசாரணையில் இந்தியாவை சேர்ந்தவரான கணேசன் சிங்காரவேல் (வயது 61) என்பதும், குடிபோதையில் வெடிகுண்டு புரளியை கிளப்பி உள்ளார் என்றும் தெரிய வந்தது.  அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது 2004ம் ஆண்டு நவம்பர் 16ல் குற்றப்பத்திரிகை பதிவானது.  ஆனால் ஜாமீனில் வெளிவந்த அவர் சிங்கப்பூரை விட்டு தப்பினார்.  கடந்த வருடம் அமெரிக்காவில் சட்டவிரோத முறையில் தங்கியிருந்ததற்காக கைது செய்யப்பட்ட அவர் சிங்கப்பூருக்கு செல்ல விரும்பினார்.  அங்கு சிங்கப்பூர் போலீசார் கடந்த ஜூலையில் கைது செய்தனர்.

அவர் தனது தரப்பு வாதத்தில், மதுபானம் தனது வாழ்க்கை மற்றும் குடும்பத்தினை எப்படி சீரழித்தது என்பது பற்றி தெரிவித்து உள்ளார்.  மனைவி விவாகரத்து செய்தது, குழந்தைகள் கைவிட்டது ஆகியவை பற்றியும், அவரது குடும்பம் அவருக்கு உதவி செய்ய விரும்பவில்லை என்பது பற்றியும் அதில் அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story