ரஷியா அருகே நடுக்கடலில் 2 கப்பல்களில் தீ; பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு - இந்திய மாலுமிகள் கதி என்ன?


ரஷியா அருகே நடுக்கடலில் 2 கப்பல்களில் தீ; பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு - இந்திய மாலுமிகள் கதி என்ன?
x
தினத்தந்தி 22 Jan 2019 11:45 PM GMT (Updated: 22 Jan 2019 8:01 PM GMT)

ரஷியா அருகே நடுக்கடலில் 2 கப்பல்களில் ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.

மாஸ்கோ,

ரஷியா அருகே, நடுக்கடலில் 2 கப்பல்களில் தீப்பிடித்ததில் 14 பேர் பலியாகினர். இந்த கப்பல்களில் பயணம் செய்த இந்திய மாலுமிகளின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

உக்ரைனின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கிரீமியா தீபகற்ப பகுதியை கடந்த 2014-ம் ஆண்டு ரஷியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.

இதன் காரணமாக இருநாடுகளுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் கிரீமியா சர்ச்சைக்குரிய மற்றும் எப்போதும் பதற்றமான சூழல் நிலவும் பகுதியாக திகழ்கிறது.

இந்த நிலையில் ரஷியா மற்றும் கிரீமியா இடையேயான கெர்ச் ஜலசந்தியில் நேற்று முன்தினம் தான்சானியா நாட்டு கொடிகளுடன் 2 கப்பல்கள் சென்று கொண்டிருந்தன.

‘தி கேண்டி’ என்ற கப்பலில் திரவ எரிவாயு ஏற்றி செல்லப்பட்டது. மற்றொன்று ‘தி மேஸ்ட்ரோ’ என்ற டேங்கர் கப்பலாகும்.

‘தி கேண்டி’ கப்பலில் 8 இந்தியர்கள் மற்றும் துருக்கியை சேர்ந்த 9 பேர் மாலுமிகளாக இருந்தனர். அதே போல் ‘தி மேஸ்ட்ரோ’ கப்பலில் 7 இந்தியர்கள், 7 துருக்கியர்கள் மற்றும் லிபியா நாட்டுக்காரர் ஒருவர் என 15 மாலுமிகள் இருந்தனர்.

ரஷியாவின் ஜலசந்தியில் சென்றுகொண்டிருந்தபோது 2 கப்பல்களும் நடுக்கடலில் நிறுத்தப்பட்டன. பின்னர் ‘தி கேண்டி’ கப்பலில் இருந்த திரவ எரிவாயுவை, ‘தி மேஸ்ட்ரோ’ கப்பலுக்கு மாற்றும் பணிகள் நடந்தது.

அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு கப்பலில் தீப்பிடித்தது. இதனால் பதற்றமான சூழல் உருவானது. அதில் இருந்த கப்பல் ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் அதற்குள் தீ மளமளவென பரவியதால் மற்றொரு கப்பலிலும் தீப்பிடித்து. 2 கப்பல்களிலும் தீ கொழுந்து விட்டு எரிந்தன.

இது குறித்து தகவல்கிடைத்ததும் ரஷிய கடற்படை வீரர்கள் படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்து, மீட்பு பணிகளில் இறங்கினர்.

ஆனால் அவர்கள் வருவதற்குள் 11 பேர் தீயில் கருகி பரிதாபமாக இறந்ததாக முதலில் தகவல் வெளியான நிலையில், தற்போது உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கப்பல் ஊழியர்கள் சிலர் தீப்பிடித்து எரிந்த கப்பல்களில் இருந்து கடலில் குதித்து உயிர் தப்பியதாக தெரிகிறது.

நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 12 பேரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். மேலும் 6 பேர் மாயமாகினார். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

அவர்கள் அனைவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என நம்பப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என தெரிகிறது.

இரு கப்பல்களிலும் பயணம் செய்த இந்திய மாலுமிகளின் கதி என்ன என்பது தெரியவில்லை. அதே போல் தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பதும் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.


Next Story