பிரெக்சிட் ஒப்பந்தம்: இங்கிலாந்தில் கடும் உணவுப்பிரச்சினை ஏற்படும் - வணிக நிறுவனங்கள் எச்சரிக்கை


பிரெக்சிட் ஒப்பந்தம்:  இங்கிலாந்தில்  கடும் உணவுப்பிரச்சினை ஏற்படும் - வணிக நிறுவனங்கள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 Feb 2019 10:52 AM GMT (Updated: 2 Feb 2019 10:52 AM GMT)

ஐரோப்பிய ஒன்றியத்துடன் எந்த ஒப்பந்தமும் செய்யாமலே வெளியேறும் பட்சத்தில், பிரெக்சிட்டால் இங்கிலாந்தில் கடும் உணவுப்பிரச்சினைகள் ஏற்படும் என இங்கிலாந்தின் முன்னணி வர்த்தக நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் போன்ற உணவுப்பொருட்களுக்காக இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தையே சார்ந்திருப்பதால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் அது தொடர்பான ஒப்பந்தங்கள் எதுவும் செய்யப்படாமலே பிரெக்சிட் நிறைவேற்றப்படும் பட்சத்தில், அதாவது, மார்ச் மாதத்தில் இங்கிலாந்து  ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் பட்சத்தில், கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளது என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இங்கிலாந்தின்  முன்னணி வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்றில், எல்லையில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் வரி விதிப்பால் ஏற்படும் விலை உயர்வு ஆகியவற்றால் உணவுப்பொருட்கள் பற்றாக்குறை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதுவும் சரியாக பிரெக்சிட் நடைபெறவுள்ள மார்ச் மாதத்தில் காய்கறிகள், பழங்கள் சீசன் இல்லாததால், இங்கிலாந்தில்  பயன்படுத்தப்படும் 90 சதவிகிதம் கீரைகள், 80 சதவிகிதம் தக்காளிப்பழங்கள் மற்றும் 70 சதவிகிதம் இதர பழங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அந்த நேரத்தில் இறக்குமதி செய்யப்படும் என்பதால் நிலைமை மிக மோசமாகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். 

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அக்கறையுடன் செயல்படுபவர்கள் என்னும் முறையில், வர்த்தகர்களாகிய நாங்கள் எங்களால் முடிந்தவரையில் பொருட்களை சேகரித்து வைத்திருக்கிறோம், என்றாலும் சேமிப்புக் கிடங்குகள் குறைவாகவே இருப்பதோடு, உறைய வைத்தும், குளிர்சாதனப்பெட்டியிலும் வைத்து சேமிக்கப்பட்டிருந்த உணவுப்பொருட்களும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு விட்டன. 

அப்படியே அதிக சேமிப்பு கிடங்குகள் இருந்தாலும்கூட, கீரைகள் பழங்கள் போன்றவற்றை சேமித்து வைக்க முடியாது. எனவே, நாடாளுமன்றத்தில் உள்ள உங்கள் சகாக்களுடன் கூடிப்பேசி, உடனடியாக ஒப்பந்தங்கள் இன்றி நிறைவேற்றப்படும் பிரெக்சிட்டால் ஏற்படவிருக்கும் அதிர்ச்சியை தவிர்ப்பதற்காக, ஒரு நல்ல தீர்வை எடுத்து இங்கிலாந்து  நுகர்வோரை இக்கட்டான சூழலுக்குள் விடாமல் பார்த்துக் கொள்ளுமாறு உங்களை கேட்டுக் கொள்ளுகிறோம் என்று அந்த கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Next Story