ஆப்கானிஸ்தானில் ராணுவம் அதிரடி தாக்குதல்; 15 தலீபான்கள் பலி


ஆப்கானிஸ்தானில் ராணுவம் அதிரடி தாக்குதல்; 15 தலீபான்கள் பலி
x
தினத்தந்தி 2 Feb 2019 11:15 PM GMT (Updated: 2 Feb 2019 7:20 PM GMT)

ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 15 தலீபான்கள் பலியாயினர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையை உள்நாட்டுப்படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், அங்கு பாரா மாகாணத்தில், பாக் இ சாலித் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தலீபான்கள் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு உளவு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்தப் பகுதிகளை சுற்றி வளைத்து ராணுவத்தினர் அதிரடி தாக்குதல்கள் நடத்தினர். இந்த தாக்குதலின் முடிவில் 5 தலீபான் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

பலியானவர்களில் தலீபான் உள்ளூர் தளபதி காஜி அப்துல் காதிரும் ஒருவர் என மாகாண போலீஸ் செய்தி தொடர்பாளர் மொகிதுல்லா மொகிப் கூறினார்.

இந்த தாக்குதலின்போது 8 பயங்கரவாதிகள் உயிருடன் பிடிபட்டனர்; பாக் இ சாலித் மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேபோன்று பால்க் மாகாணம், சாம்டால் மாவட்டத்திலும் தலீபான்களை குறிவைத்து பல்வேறு இடங்களில் ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்களில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் ராணுவம் கூறுகிறது.

இந்த தாக்குதல்கள் குறித்து தலீபான்கள் தரப்பில் தகவல் எதுவும் இல்லை.


Next Story