வடகொரிய அதிபருடனான சந்திப்பு எப்போது? அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு


வடகொரிய அதிபருடனான சந்திப்பு எப்போது? அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Feb 2019 3:56 AM GMT (Updated: 6 Feb 2019 3:56 AM GMT)

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை வியட்நாமில் சந்தித்து பேச இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து வந்தது வடகொரியா. குறிப்பாக இந்த விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு கடும் மோதல் போக்கு நீடித்தது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறினர். இது உலக நாடுகளுக்கு கவலை அளிப்பதாக அமைந்தது. இந்த சூழலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். அப்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் அன் உறுதி அளித்தார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் இருநாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. எனினும் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது மற்றும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவது போன்ற விவகாரங்களில் இருநாடுகள் இடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது.

இதற்கு தீர்வுகாண 2 வது உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேச டிரம்ப், கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் பரபஸ்பர விருப்பம் தெரிவித்தனர். அதன்படி இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், வியட்நாம் நாட்டில் வரும் பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை சந்திக்க இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.  ஆனால், எந்த நகரத்தில் நடைபெறும் என்ற தகவலை அறிவிக்கவில்லை.


Next Story