டிரம்ப் உரையின் போது தூங்கி வழிந்த சிறப்பு விருந்தினர் ஜோஷ்வா டிரம்ப்


டிரம்ப் உரையின் போது தூங்கி வழிந்த சிறப்பு விருந்தினர் ஜோஷ்வா டிரம்ப்
x
தினத்தந்தி 7 Feb 2019 7:21 AM GMT (Updated: 7 Feb 2019 7:21 AM GMT)

அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜோஷ்வா டிரம்ப், டிரம்ப் உரையின்போது தூங்கி வழிந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் டெலாவர் மாகாணம் வில்மிங்டன் நகரைச் சேர்ந்தவர் ஜோஷ்வா டிரம்ப். இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவனின் பெயருடன் டிரம்ப் ஒட்டிக்கொண்டிருப்பதால் பள்ளியில் சக நண்பர்கள் மட்டம் தட்டிப் பேசி வந்துள்ளனர். இதனால், ஜோஷ்வா மன வேதனை அடைந்தார்.

ஜோஷ்வாவின்  நிலையை அறிந்த அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் அச்சிறுவனை சந்தோஷப்படுத்த முடிவெடுத்தனர். இதையடுத்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையாற்றும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க முதல் பெண்மணி மெலானியா மற்றும் அதிபர் டிரம்ப் ஆகியோர் அழைப்பு விடுத்து இருந்தனர்.  ஸ்டேட் ஆஃப் யூனியன் எனும் அமெரிக்க அதிபரின் உரையில் கலந்துகொள்வதற்காக மொத்தம் 13 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. 

நிகழ்வில் கலந்துக் கொண்டு அதிபரின் நீண்ட உரையை முழுமையாக கேட்பதற்குள் இந்த சிறுவன் தூங்கி விட்டான். ஜோஷ்வா டிரம்ப் தூங்கி வழியும் புகைப்படங்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. ஜோஷ்வா டிரம்ப் தனது எதிர்ப்பை காட்டியிருப்பதாக, டிரம்ப் எதிர்ப்பாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஜோஷ்வா டிரம்பை கொண்டாடி வருகின்றனர்.

Next Story