உலக வங்கி தலைவர் பதவிக்கு டேவிட் மால்பாஸ் என்பவரை முன்னிறுத்தினார் டிரம்ப்


உலக வங்கி தலைவர் பதவிக்கு டேவிட் மால்பாஸ் என்பவரை முன்னிறுத்தினார் டிரம்ப்
x
தினத்தந்தி 7 Feb 2019 8:09 AM GMT (Updated: 7 Feb 2019 8:09 AM GMT)

உலக வங்கி தலைவர் பதவிக்கு டேவிட் மால்பாஸ் என்பவரை டொனால்டு டிரம்ப் முன்மொழிந்துள்ளார்.

வாஷிங்டன்,

உலக நாடுகளில் வறுமையை குறைக்கவும், பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் செயல்பட்டு வரும் உலக வங்கியில் இந்தியா உள்பட 189 நாடுகள் அங்கத்தினர்களாக உள்ளன. உலக வங்கியின் தலைமையகம் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ளது. இந்த வங்கியின் தலைவராக இருக்கும் ஜிம் யாங் கிம், ஜனவரி  இறுதியுடன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 

இதையடுத்து, உலக வங்கியின் தலைவர் பொறுப்புக்கு முன்னிறுத்தும் நபரை தேர்வு செய்வதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம் தீவிரம் காட்டியது. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் பெப்ஸி நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ-வான இந்திராநூயி, இவாங்கா டிரம்ப் ஆகியோர்  பெயரும் இந்த பதவிக்கு அமெரிக்கா சார்பில் முன்மொழியப்படலாம் என தகவல் வெளியானது. 

இந்த நிலையில்,  அமெரிக்க கருவூலத்துறை அதிகாரி மல்பாஸ் என்பவரை உலக வங்கியின் தலைவராக நியமிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார். உலக வங்கியின் இயக்குநர்கள் ஒப்புதல் கிடைத்தால், டேவிட் மால்பாஸ் வங்கியின் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்.

Next Story