முதுகுத்தண்டில் பிரச்சினை கர்ப்பபையில் இருந்து கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை


முதுகுத்தண்டில் பிரச்சினை கர்ப்பபையில் இருந்து கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 14 Feb 2019 11:42 PM GMT (Updated: 14 Feb 2019 11:42 PM GMT)

முதுகுத்தண்டு பிரச்சினை காரணமாக தாயின் கர்ப்பபையில் இருந்து கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை செய்து இங்கிலாந்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

லண்டன், 

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள எஸ்ஸெக்ஸ் நகரை சேர்ந்தவர் பீதன் சிம்சன் (வயது 26). 5 மாத கர்ப்பிணி.

இவர் கடந்த மாதம் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றார். பரிசோதனையின்போது அவரது கர்ப்பபையில் இருந்த கருக்குழந்தை முதுகுத்தண்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இந்த முதுகுத்தண்டு பிரச்சினையோடு பிறந்தால் குழந்தை நடக்கும் திறனை இழப்பதோடு, குழந்தை வளர்ந்த பிறகு எண்ணற்ற அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டிய சூழல் உருவாகும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதனால் மிகவும் மனமுடைந்து போன பீதன் சிம்சன் இதற்கு தீர்வு என்ன என்று மருத்துவர்களிடம் கேட்டார்.

அதற்கு மருத்துவர்கள், கருவை அழிக்கலாம் அல்லது அப்படியே விட்டுவிடலாம் அல்லது கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை செய்யலாம் என்கிற 3 வாய்ப்புகளை பீதன் சிம்சனுக்கு வழங்கினர்.

நீண்ட யோசனைக்கு பிறகு கருக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய பீதன் சிம்சன் முடிவெடுத்தார். இதையடுத்து லண்டன் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் கருக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இங்கிலாந்தை சேர்ந்த உலகின் தலை சிறந்த டாக்டர்கள் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். அவர்கள் பீதன் சிம்சனின் கர்ப்பபையில் இருந்து கருக்குழந்தையை நேர்த்தியாக வெளியே எடுத்தனர்.

பின்னர் அவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அதன் முதுகுத்தண்டை சரி செய்தனர். அதனை தொடர்ந்து பீதன் சிம்சனின் கர்ப்பபையில் மீண்டும் பத்திரமாக வைத்து சாதனை படைத்தனர். பீதன் சிம்சனும், அவரது கருக்குழந்தையும் தற்போது நலமாக இருக்கிறார்கள்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பீதன் சிம்சன், தனது கர்ப்பபையில் உள்ள கருக்குழந்தைக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை குறித்தும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய டாக்டர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தும் ‘பேஸ்புக்’கில் பதிவிட்டார்.

அதில் “நம்ப முடியாத அறுவை சிகிச்சை நடந்து முடிந்துவிட்டது. உடல் ரீதியாக நான் அறுவை சிகிச்சை செய்ய தயாராக இல்லையென்றாலும் என் மனம் அதை தான் விரும்பியது. எனது கர்ப்பபையில் உள்ள குழந்தை என் வயிற்றில் உதைப்பதை உணர்கிறேன்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Next Story