சுலோவேனியாவில் ருசிகரம்: ‘சாண்ட்விச்’ திருடியதால் பதவியை இழந்த எம்.பி.


சுலோவேனியாவில் ருசிகரம்: ‘சாண்ட்விச்’ திருடியதால் பதவியை இழந்த எம்.பி.
x
தினத்தந்தி 15 Feb 2019 11:15 PM GMT (Updated: 15 Feb 2019 9:09 PM GMT)

சுலோவேனியாவில் சாண்ட்விச் திருடியதால் எம்.பி. ஒருவர், தனது பதவியை இழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

லியூப்லியானா,

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்று சுலோவேனியா. இந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக பதவி வகித்து வந்தவர் தர்ஜ் கிரஜ்சிச் (வயது 54). இவர் தலைநகர் லியூப்லியானாவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இருந்து துரித உணவு பண்டமான ‘சாண்ட்விச்’-ஐ திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் நாடாளுமன்றம் வரை சென்றது.

அங்கு இது குறித்து விளக்கம் அளித்த தர்ஜ் கிரஜ்சிச், “நான் ‘சாண்ட்விச்’ வாங்க பல்பொருள் அங்காடிக்கு சென்றபோது அங்கிருந்த ஊழியர்கள் என்னை கண்டுகொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த நான் சாண்ட்விச்சை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டேன்” என்று கூறினார். கடையின் பாதுகாப்பை பரிசோதனை செய்ய தான் இப்படி செய்ததாகவும், ‘சாண்ட்விச்’-க்கான பணத்தை பின்னர் தான் கொடுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் தர்ஜ் கிரஜ்சிச் கூறுவதை ஏற்க முடியாது என்றும், அவரது செயல் கண்டனத்துக்குரியது என்றும் நாடாளுமன்றம் தெரிவித்தது. அதனை தொடர்ந்து தர்ஜ் கிரஜ்சிச் தனது தவறை ஒப்புக்கொண்டு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.


Next Story