2002-ம் ஆண்டிலேயே ஜெய்ஷ் இ முகமது இயக்கம் தடை செய்யப்பட்டு விட்டது - பாகிஸ்தான் சொல்கிறது


2002-ம் ஆண்டிலேயே ஜெய்ஷ் இ முகமது இயக்கம் தடை செய்யப்பட்டு விட்டது - பாகிஸ்தான் சொல்கிறது
x
தினத்தந்தி 17 Feb 2019 4:00 PM GMT (Updated: 17 Feb 2019 4:00 PM GMT)

2002-ம் ஆண்டிலேயே ஜெய்ஷ் இ முகமது இயக்கம் தடை செய்யப்பட்டு விட்டது என பாகிஸ்தான் கூறியுள்ளது.

இஸ்லாமாபாத், 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎப்) சென்று கொண்டிருந்த பேருந்து மீது, சக்திவாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதி மோதி வெடிக்க செய்ததில் 40 வீரர்கள் பலியாகினர். வியாழக்கிழமை  நடந்த இந்த தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்புக்கு தலைவராக மசூத் அசார் செயல்பட்டு வருகிறார். 

மசூத் அசாரை ஐநா பாதுகாப்பு கவுன்சில் மூலம் சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து, அவரது அமைப்பை முடக்கும் நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.  அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இதே தீர்மானத்தைக் கொண்டுவந்த போதிலும் நிறைவேற்ற முடியவில்லை. சீனா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடையை ஏற்படுத்துகிறது. அசார் இன்னும் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றுகிறான். ஆனால் பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பது கிடையாது.  

இந்நிலையில் 2002-ம் ஆண்டிலேயே ஜெய்ஷ் இ முகமது இயக்கம் தடை செய்யப்பட்டு விட்டது என பாகிஸ்தான் கூறியுள்ளது. 

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெய்ஷ் இ முகமது அமைப்பு இன்றும் தடை செய்யப்பட்ட அமைப்பாகத்தான் இருக்கிறது. 2002ம் ஆண்டிலேயே அந்த அமைப்பை பாகிஸ்தான் தடை செய்தது. அத்துடன் அதற்கு எதிரான பொருளாதார தடைகளை நிறைவேற்றுவதில் பாகிஸ்தான் முனைப்பாக செயல்பட்டு வருகிறது என்றார். இதைப்போல, இந்தியாவுடனான உறவை சீர்படுத்த பாகிஸ்தான் விரும்புவதாக கூறிய அவர், இந்த விவகாரத்தில் இந்தியா ஒரு அடி முன்வைத்தால், பாகிஸ்தான் 2 அடிகள் வைக்கும் என்றும் தெரிவித்தார்.

Next Story