பாகிஸ்தானில் இந்திய பாடலுக்கு மாணவர்கள் நடனம்; பள்ளியின் அங்கீகாரம் ரத்து


பாகிஸ்தானில் இந்திய பாடலுக்கு மாணவர்கள் நடனம்; பள்ளியின் அங்கீகாரம் ரத்து
x
தினத்தந்தி 17 Feb 2019 11:00 PM GMT (Updated: 17 Feb 2019 7:39 PM GMT)

பாகிஸ்தானில் இந்திய பாடலுக்கு மாணவர்கள் நடனம் ஆடியதால், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.

கராச்சி,

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.

அப்போது மாணவர்கள் சிலர் இந்திய பாடலுக்கு நடனமாடினர். அவர்களுக்கு பின்னால் இருந்த திரையில் இந்திய தேசிய கொடி காட்டப்பட்டது. இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. ஏராளமான மக்கள் இதனை வன்மையாக கண்டித்தனர். அதனை தொடர்ந்து இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பள்ளி நிர்வாகத்துக்கு, மாகாண தனியார் பள்ளி பதிவு இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால் பள்ளியின் உரிமையாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தவறிவிட்டார். இதனையடுத்து அந்த பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக மாகாண தனியார் பள்ளி பதிவு இயக்குனரகம் அறிவித்தது.

இது குறித்து இயக்குனரகத்தின் பதிவாளர் கூறுகையில், “பள்ளி விழாக்களில் இந்திய கலாசாரத்தை ஊக்குவிப்பது, பாகிஸ்தானின் கவுரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எந்த விதத்திலும் இதனை சகித்துக்கொள்ள முடியாது” என்றார்.


Next Story