புல்வாமா தாக்குதலால் எங்களுக்கு என்ன பயன்? இம்ரான்கான் கேள்வி


புல்வாமா தாக்குதலால் எங்களுக்கு என்ன பயன்? இம்ரான்கான் கேள்வி
x
தினத்தந்தி 19 Feb 2019 9:45 AM GMT (Updated: 19 Feb 2019 9:45 AM GMT)

புல்வாமா தாக்குதலால் எங்களுக்கு என்ன பயன்? என்று இம்ரான்கான் கேள்வி எழுப்பியுள்ளார்.

40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. பாகிஸ்தான் அரசின் ஆதரவுடன் செயல்பட்டுவரும் பயங்கரவாத இயக்கம் இந்தியாவில் கொடூரமான தாக்குதல்களை வரிசையாக முன்னெடுக்கிறது. இருப்பினும் பாகிஸ்தான் எங்களுக்கு சம்பந்தம் கிடையாது என மறுப்பு தெரிவிக்கிறது. இப்போது புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், புல்வாமா தாக்குதலால் எங்களுக்கு என்ன பயன்? என கேள்வியை எழுப்பியுள்ளார். 

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்களில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என்பதற்கு இந்தியாவிடம் எந்தஒரு வலுவான ஆதாரமும் கிடையாது எனவும் இம்ரான்கான் கூறியுள்ளார். 
 
"நீங்கள் (இந்தியா) எந்த ஆதாரமும் இல்லாமல் பாகிஸ்தான் அரசாங்கத்தை குற்றம் சாட்டுகிறீர்கள்... உங்களிடம் ஏதேனும் ஆதாரம் இருந்தால், நாங்கள் நடவடிக்கையை மேற்கொள்வோம்.  எங்களுடைய மண்ணை வன்முறையை பரப்ப யாரும் பயன்படுத்தக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பாகிஸ்தானில் உள்ள யாரேனும் ஒருவருக்கு எதிராக இந்தியா தரப்பில் ஆதாரம் அளிக்கப்பட்டால் நடவடிக்கையை எடுப்போம் என உறுதியளிக்கிறோம். புல்வாமா தாக்குதலில் இருந்து  பாகிஸ்தானுக்கு என்ன கிடைக்கும்? ஸ்திரமான நிலையை நோக்கி நகர வேண்டும் என்ற நிலையை பாகிஸ்தான் கொண்டுள்ளது. புதிய பாகிஸ்தான் புதிய சிந்தனையை கொண்டுள்ளது,” என கூறியுள்ளார் இம்ரான்கான்.

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த இம்ரான்கான் "நீங்கள் எங்களை தாக்க வேண்டும் என்று நினைத்தால், நாங்கள் பதிலடி கொடுப்பது குறித்து நினைப்போம்... நாங்கள் பதிலடி கொடுப்போம். ஒரு போர் தொடங்குவது என்பது மனிதர்களின் கையில்தான் உள்ளது. இது எங்கு சென்று முடியும் என்பது கடவுளுக்குதான் தெரியும். இந்த பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story