பாகிஸ்தானை அச்சுறுத்தும் வகையில் இந்தியா ஏதாவது சாகசத்தை செய்ய நினைத்தால் தக்க பதிலடி கொடுப்போம்- இம்ரான் கான்


பாகிஸ்தானை அச்சுறுத்தும் வகையில் இந்தியா ஏதாவது சாகசத்தை செய்ய நினைத்தால் தக்க பதிலடி கொடுப்போம்- இம்ரான் கான்
x
தினத்தந்தி 19 Feb 2019 11:19 AM GMT (Updated: 19 Feb 2019 12:20 PM GMT)

பாகிஸ்தானை அச்சுறுத்தும் வகையில் ஏதாவது சாகசத்தை இந்தியா செய்ய நினைத்தால் அதற்கு பாகிஸ்தான் நிச்சயமான பதிலடியை கொடுக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறினார்.

இஸ்லாமாபாத்

புல்வாமா தாக்குதல் நடந்தபிறகு முதல்முறையாக அது தொடர்பாக பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சியான பிடிவியில் அந்நாட்டின் பிரதமர்  இம்ரான் கான் முதல்முறையாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பாகிஸ்தானின் இறையாண்மையை அச்சுறுத்தும் வகையில் ஏதாவது சாகசத்தை இந்தியா செய்ய நினைத்தால் அதற்கு பாகிஸ்தான் நிச்சயமான பதிலடியை கொடுக்கும்'

காஷ்மீர் பிரச்சினைக்கு ராணுவ தீர்வு எதுவும் இல்லை. பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாக அமையும். தனது சொந்த முன்னேற்றத்தை பாதிக்கக்கூடிய நடவடிக்கையில் பாகிஸ்தான் ஏன் ஈடுபட போகிறது? 

'பாகிஸ்தான் கடந்த 15 ஆண்டுகளாக பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டு வருகிறது. இதில் நாங்கள் 70 ஆயிரம் பேரை இழந்திருக்கிறோம். நாங்கள் அமைதியை நோக்கி நகரும் வேளையில் நாங்கள் ஏன் இப்படிச் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது?

இந்தியா இன்னமும் கடந்த காலத்திலேயே தேங்கியிருக்க விரும்புகிறதா என நான் கேள்வி கேட்க விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் காஷ்மீரில் ஏதாவதொரு சம்பவம் நடக்கும்போதும் இந்தியா பாகிஸ்தான் மீது பழி போடுகிறது.

காஷ்மீர் சர்ச்சையை பொருத்தவரையில் தீர்வை நோக்கி நகர, ஒரு பேச்சுவார்த்தை  தொடங்குவதற்கு பதிலாக இந்தியா தேவையின்றி எங்கள் மீது பழி சுமத்துகிறது.

நான் ஒரு விஷயத்தை இந்தியாவுக்கு தெளிவாக கூறுகிறேன். இது புதிய பாகிஸ்தான். புது சிந்தனையோடும் புது மனநிலையுடனும் நாங்கள் உள்ளோம். மற்ற நாடுகளில் நடக்கும் பயங்கரவாதச் செயல்களில் எங்கள் தரப்பில் இருந்து யாராவது ஈடுபட வேண்டும் என்பது எங்கள் விருப்பம் இல்லை. நாங்கள் என்ன எங்கள் மண்ணில் பயங்கரவாதம் வேண்டும் என்று
விரும்புகிறோமா? 

'இந்திய அரசு எந்தவித விசாரணையை மேற்கொள்ள விரும்பினாலும் அல்லது எதாவது பாகிஸ்தானியர் இந்த தாக்குதலில் ஈடுபட்டார்களா என ஆராயந்தறிய விரும்பினால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் புலனாய்வில் பாகிஸ்தானியர் யாராவது ஈடுபட்டிருப்பது தெரிந்தால் எங்களிடம் பகிருங்கள். நாங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என உறுதியளிக்கிறேன்.

நாங்கள் இன்னொருவரின் அழுத்தத்திற்கு உள்ளாகி எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம். பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் மண்ணை யாராவது பயன்படுத்தினால் அவர்கள் எங்கள் நாட்டுக்கு எதிரி என உணர்கிறோம். அவர்கள் எங்களது விருப்பங்களுக்கு எதிரானவர்கள்.

எப்போதெல்லாம் நாங்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை துவங்க விரும்புகிறோமோ அப்போதெல்லாம் முதலில் பயங்கரவாதத்தை பற்றி பேச வேண்டும் என முன் நிபந்தனை விதிக்கிறது இந்தியா. பயங்கரவாதம் குறித்து பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என உறுதியளிக்கிறேன். அது ஒரு பிராந்திய விவகாரம். அந்த பிராந்தியத்தில் பயங்கரவாதம் இருக்கக்கூடாது என்றே நாங்கள் விரும்புகிறோம்.

பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது நாங்கள்தான். கிட்டத்தட்ட 70 ஆயிரம் பேரை இழந்திருக்கிறோம். பயங்கரவாதத்துக்கு சுமார் 100 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான செல்வத்தை இழந்திருக்கிறோம். ஆகவே நாங்கள் பயங்கரவாதம் குறித்து பேச தயாராகவே இருக்கிறோம் இவ்வாறு அவர் கூறினார்.

Next Story