உலக செய்திகள்

புல்வாமா தாக்குதல் கொடூரமானது: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் + "||" + Pulwama Attack "Horrible", Says Trump, Urging India, Pak To "Get Along"

புல்வாமா தாக்குதல் கொடூரமானது: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

புல்வாமா தாக்குதல் கொடூரமானது: அமெரிக்க அதிபர்  டொனால்டு டிரம்ப்
இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்பட்டால் சிறப்பானதாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
வாஷிங்டன்,

காஷ்மீரில் புலவாமா மாவட்டத்தில் துணை ராணுவத்தினர் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த சுப்பிரமணியன், சிவசந்திரன் உள்ளிட்ட 40 வீரர்கள் பலியனார்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இயங்கி வரும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புல்வாமா தாக்குதலை மிகவும் கொடூரமானது என்று தெரிவித்துள்ளார்.  வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- “ 

ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் இந்திய வீரர்கள் 40 பேர்  மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதல் மிகவும் கொடூரமான  சம்பவம். அங்கு நிலவும் சூழலை நான் தொடர்ந்து அறிந்து வருகிறேன். அது தொடர்பாக ஏராளமான விவரங்களும் வந்துள்ளது. நாங்கள் சரியான நேரத்தில் இது குறித்து எங்களின் கருத்தை தெரிவிப்போம். அதேசமயம், இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கள் பகையை மறந்து, இணைந்து சென்றால் மிகவும் சிறப்பான  நிகழ்வாக இருக்கும்” என்றார். 

அதிபர் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன்,   உள்துறை அமைச்சர் மைக் பாம்பியோ,  வெள்ளை மாளிகை செயலாளர் சாரா சாண்டர்ஸ் ஆகியோர் தனித்தனியே விடுத்துள்ள அறிக்கையில், பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் மீது உடனடியாக நடவடிக்கை வேண்டும் எனவும் பாகிஸ்தானை வலியுறுத்தினர்.