கனடாவில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் பரிதாப சாவு - சிரியா அகதிகளுக்கு நேர்ந்த சோகம்


கனடாவில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் பரிதாப சாவு - சிரியா அகதிகளுக்கு நேர்ந்த சோகம்
x
தினத்தந்தி 20 Feb 2019 11:00 PM GMT (Updated: 20 Feb 2019 8:02 PM GMT)

கனடாவில் சிரியாவை சேர்ந்த அகதி குடும்பம் வசித்து வந்த வீட்டில் தீப்பிடித்ததில் குழந்தைகள் 7 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

ஹலிபாக்ஸ்,

சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசுப்படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான இந்த போரில் அப்பாவி மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் தேடி பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்கிறார்கள்.

அந்த வகையில் சிரியாவை சேர்ந்த இப்ராஹிம்-கவ்தார் பாருஹ் என்ற தம்பதி தங்களின் குழந்தைகளான அகமது (வயது 15), ரோலா (12) முகமது (9) ஓலா (8) ஹாலா (3) ராணா (2) ஆகியோருடன் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனடாவில் தஞ்சம் புகுந்தனர்.

நோவா ஸ்கொடியா மாகாணத்தின் எல்ம்ஸ்டாலோ நகரில் வசித்து வந்த இந்த தம்பதி, அகதிகளுக்குரிய தொண்டுபணிகளை மேற்கொள்ள 2018-ம் ஆண்டில் அம்மாகாணத்தின் தலைநகரான ஹலிபாக்சில் உள்ள ஸ்பிரைபைல்ட் பகுதிக்கு இடம் பெயர்ந்தனர்.

அங்கு 2 மாடிகளை கொண்ட ஒரு வீட்டில் தங்களின் குழந்தைகளுடன் அவர்கள் வசித்து வந்தனர்.

கடந்த நவம்பர் மாதம் அந்த தம்பதிக்கு மேலும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. கணவன்-மனைவி இருவரும் 7 குழந்தைகளையும் அன்பும், அரவணைப்பும் செலுத்தி வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அந்த தம்பதி தங்களின் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் நள்ளிரவில் வீட்டின் கீழ் தளத்தில் திடீரென தீப்பிடித்தது.

மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ மேல்தளத்துக்கும் பரவியது. சற்று நேரத்தில் வீடு முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது. வீட்டில் இருந்த அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் தீ எரிவதை அவர்கள் உணரவில்லை.

இதற்கிடையில் வீட்டில் தீப்பற்றி எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

ஆனால் அதற்குள் குழந்தைகள் 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர். இப்ராஹிம் மற்றும் கவ்தார் பாருஹ் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

அவர்களில் இப்ராஹிமின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு போரில் இருந்து தப்பி வாழ்வாதாரம் தேடி வந்த அகதி தம்பதி, தீவிபத்தில் ஒரே நேரத்தில் 7 குழந்தைகளையும் பறிகொடுத்தது அங்கு வாழும் சக அகதிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story