மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட “ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு பாகிஸ்தான் தடை”


மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட “ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு பாகிஸ்தான் தடை”
x
தினத்தந்தி 21 Feb 2019 5:40 PM GMT (Updated: 21 Feb 2019 5:40 PM GMT)

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.

இஸ்லாமாபாத்,

காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் துணை ராணுவ படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40 பேர் இறந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா மட்டுமின்றி உலக தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு தான் காரணம் என இந்தியா குற்றம் சாட்டியது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று தொடக்கம் முதலே மத்திய அரசு குற்றம்சாட்டி வருகிறது. அதோடு, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.

பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது, உலக நாடுகள் ஒருங்கிணைந்து இனி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உலகநாடுகளை வலியுறுத்தினார்.

இத்தகைய சூழலில், பாகிஸ்தானில் இன்று நடைபெற்ற தேசிய பாதுகாப்புக் குழு கூட்டத்தில், பயங்கரவாத அமைப்புக்கு தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. 2008 மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஜமாத்-உத்-தவா அமைப்பின் தொண்டு பிரிவு நிறுவனமான ஃபலாஹ்-இ-இன்சானியாத் என்ற அமைப்பிற்கும் இந்தக் கூட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹஃபீஸ் சயீத் ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவராக உள்ளார். ஜமாத்-உத்-தவாவின் தொண்டு நிறுவனமாக ஃபலா-இ-இன்சானியாத் செயல்பட்டு வந்தது.
அவரது தலைக்கு 10 மில்லியன் டாலர்கள் விலை வைத்து, தேடப்படும் பயங்கரவாதி என்று அமெரிக்கா ஏற்கனவே அறிவித்துள்ளது. கடந்த 2008-ல் நடைபெற்ற மும்பை தாக்குதல் தொடர்பாக அவரைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா பாகிஸ்தானிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தீவிரவாதத்துக்கு எதிரான தேசிய செயல் திட்டத்தை விரிவாக மறுஆய்வு செய்ததாகவும், பாகிஸ்தான் உள்விவகாரங்கள் துறையின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Next Story