ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த அமெரிக்க பெண் நாடு திரும்ப டிரம்ப் முட்டுக்கட்டை


ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த அமெரிக்க பெண் நாடு திரும்ப டிரம்ப் முட்டுக்கட்டை
x
தினத்தந்தி 21 Feb 2019 9:35 PM GMT (Updated: 21 Feb 2019 9:35 PM GMT)

ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த அமெரிக்க பெண் நாடு திரும்ப டிரம்ப் தடை விதித்தார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்த ஹோதா முத்தானா என்ற பெண் தனது 20 வயதில், கடந்த 2014-ம் ஆண்டு சிரியாவுக்கு சென்று ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தார்.

தற்போது 18 மாத ஆண் குழந்தைக்கு தாயாக இருக்கும் ஹோதா முத்தானா, தான் தனது தவறை உணர்ந்துவிட்டதாகவும், அமெரிக்காவுக்கு திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது குற்றத்துக்காக அமெரிக்க நீதி விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறினார்.

ஆனால் ஹோதா முத்தானாவை அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்தார். இதுபற்றி அவர் டுவிட்டரில் “ஹோதா முத்தானா நாடு திரும்ப அனுமதிக்கக்கூடாது என வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவை நான் அறிவுறுத்தியுள்ளேன்” என குறிப்பிட்டார்.

மைக் பாம்பியோ இது குறித்து கூறுகையில், “ஹோதா முத்தானாவுக்கு அமெரிக்காவில் குடியுரிமை இல்லை. எனவே அவர் அமெரிக்கா திரும்புவதை ஏற்க முடியாது” என்றார்.

சிரியாவில் இருக்கும் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை அந்தந்த நாடுகள் திரும்ப அழைத்து, தங்கள் நாட்டின் சட்டப்படி அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story