தென்கொரியாவில் நடந்த விழாவில் பிரதமர் மோடிக்கு அமைதி விருது


தென்கொரியாவில் நடந்த விழாவில் பிரதமர் மோடிக்கு அமைதி விருது
x
தினத்தந்தி 22 Feb 2019 11:45 PM GMT (Updated: 22 Feb 2019 8:27 PM GMT)

தென்கொரியாவில் நடந்த விழாவில் பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது வழங்கப்பட்டது. இதில் கிடைத்த சுமார் ரூ.1½ கோடி பரிசுத்தொகையை கங்கை நதி தூய்மை திட்டத்துக்கு அவர் வழங்குவதாக அறிவித்தார்.

சியோல்,

துடிப்பான கொள்கைகள் மூலம் பிராந்திய மற்றும் சர்வதேச அமைதிக்கு பங்களிப்பு செய்தமைக்காகவும், உள்நாடு மற்றும் சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் சிறப்பான பங்காற்றியமைக்காகவும் பிரதமர் மோடிக்கு 2018-ம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருது கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது.

2 நாள் பயணமாக அவர் தென்கொரியா சென்றிருந்த நிலையில் இந்த விருது நேற்று அவருக்கு வழங்கப்பட்டது. தலைநகர் சியோலில் நடந்த வண்ணமிகு விழாவில் சியோல் அமைதி விருது அறக்கட்டளையினர், இந்த விருதை மோடிக்கு வழங்கினர். அப்போது அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான ஆவணப்படம் ஒன்றும் அங்கே ஒளிபரப்பப்பட்டது.

விருதை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, இது தனக்கானது மட்டுமல்ல எனவும், ஒட்டுமொத்த இந்தியாவுக்கானது என்றும் கூறினார். காந்தியடிகளின் 150-வது பிறந்த ஆண்டை கொண்டாடி வரும் வேளையில், இந்த விருதை வழங்கி கவுரப்படுத்தியதற்காக விருதுக்குழுவுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக்கொண்டார்.

இந்த விருதுடன் வழங்கப்பட்ட 2 லட்சம் டாலரை (சுமார் ரூ.1½ கோடி) கங்கை நதி தூய்மை திட்டத்துக்கு வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

24-வது ஒலிம்பிக் போட்டிகள் சியோலில் வெற்றிகரமாக நடத்தியதை நினைவுகூரும் வகையில் 1990-ம் ஆண்டு இந்த விருது நிறுவப்பட்டது. தென்கொரியாவின் சிறப்பு மிக்க இந்த விருதை பெறும் 14-வது நபர் மோடி ஆவார். ஏற்கனவே இந்த விருதை ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அனான், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் உள்ளிட்ட பிரபலங்கள் பெற்றுள்ளனர்.

முன்னதாக பிரதமர் மோடிக்கு தென்கொரிய அதிபர் மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அதிபர் மூன் ஜே இன்னுடன், மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இறுதியில் இருநாடுகளுக்கு இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியின. அந்த வகையில் உள்கட்டமைப்பு, வளர்ச்சி, ஊடகம், ஸ்டார்ட்-அப் திட்டங்கள், எல்லை தாண்டிய மற்றும் சர்வதேச குற்றத்தடுப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டன. பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பிரதமர் மோடி கூறுகையில், ‘இந்தியாவின் பொருளாதார பரிமாற்றங்களில் முக்கிய பங்காளியாக தென்கொரியா விளங்குகிறது. எங்கள் வர்த்தகம் மற்றும் முதலீடுகள் வளர்ந்து வருகின்றன. ராணுவ தொழில்நுட்பம் மற்றும் தளவாட உற்பத்தியில் இணைந்து செயல்படுவதற்கான செயல்திட்டத்தை உருவாக்க இருநாடுகளும் ஒத்துக்கொண்டுள்ளன’ என்று கூறினார்.

இதைப்போல மூன் ஜே இன் கூறும்போது, ‘உள்கட்டமைப்பு மேம்பாடு முதல் விவசாயம் மற்றும் மீன்வளம் வரை பல துறைகளில் எங்கள் ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஒப்புக்கொண்டு இருக்கிறோம். இந்தியா அமைக்க திட்டமிட்டுள்ள 7 அணு உலைகளில் தென்கொரியாவின் பங்களிப்பை விரும்புகிறது. அது தொடர்பாக கேட்டுக்கொள்ளப்பட்டால் கொரிய நிறுவனங்கள் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும்’ என்று தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக்கையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பின்னர் கொரியா போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். இதற்காக சியோலில் அமைக்கப்பட்டு உள்ள தேசிய மயானத்துக்கு சென்ற அவர், அங்கு மலர் வளையம் வைத்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அனைத்து நிகழ்வுகளையும் முடித்துக்கொண்டு நேற்று அவர் நாடு திரும்பினார்.


Next Story