அரசியல் நெருக்கடி விவகாரம்: அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை - வெனிசூலா விருப்பம்


அரசியல் நெருக்கடி விவகாரம்: அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை - வெனிசூலா விருப்பம்
x
தினத்தந்தி 23 Feb 2019 10:45 PM GMT (Updated: 23 Feb 2019 7:17 PM GMT)

அரசியல் நெருக்கடி விவகாரம் தொடர்பாக, அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வெனிசூலா விருப்பம் தெரிவித்துள்ளது.

கராக்கஸ்,

வெனிசூலா நாடாளுமன்ற சபாநாயகர் ஜூவன் குவைடோ கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென தன்னை அதிபராக அறிவித்தார். அவருக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்கா, வெனிசூலாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிப்பொருட்களை அனுப்பி வைத்தது.

ஆனால் இதை ஏற்க மறுத்த அதிபர் நிக்கோலஸ் மதுரோ, நாட்டின் எல்லைகளை மூடிவிட்டார். எனினும் கொலம்பியா மூலமாக உதவிப்பொருட்களை அனுப்ப அமெரிக்கா நடவடிக்கை எடுத்த நிலையில், நேற்று அந்த நாட்டுடனான 3 எல்லைகளையும் வெனிசூலா மூடிவிட்டது.

இந்த நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வெனிசூலா விருப்பம் தெரிவித்து உள்ளது. ‘அமெரிக்காவுடன் நாங்கள் அமைதியை விரும்புகிறோம். எங்கள் இருவருக்கு இடையே பரஸ்பர மரியாதையை விரும்புகிறோம்’ என்று வெனிசூலா வெளியுறவு மந்திரி ஜார்ஜ் அரியசா தெரிவித்தார். இதைப்போல எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைக்கு தயார் என அவர் கூறினார்.

இதற்கிடையே மதுரோவின் ஒப்புதலின் பேரில்தான் மனிதாபிமான உதவிகள் வெனிசூலாவுக்கு அளிக்க வேண்டும் என தென்ஆப்பிரிக்கா கூறியுள்ளது. இதைப்போல மனிதாபிமான உதவி என்ற போர்வையில் வெனிசூலா அரசை கவிழ்க்க முயற்சிப்பதாக அமெரிக்கா மீது ரஷியாவும் குற்றம் சாட்டியது. ஆனால் இந்த குற்றச்சாட்டு அபத்தமானது என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்தது.


Next Story