தென்கொரியாவில் இருந்து படைகளை திரும்ப பெறும் திட்டம் இல்லை - டிரம்ப் திட்டவட்டம்


தென்கொரியாவில் இருந்து படைகளை திரும்ப பெறும் திட்டம் இல்லை - டிரம்ப் திட்டவட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2019 11:15 PM GMT (Updated: 23 Feb 2019 7:43 PM GMT)

தென்கொரியாவில் இருந்து படைகளை திரும்ப பெறும் திட்டம் இல்லை என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

கொரிய தீபகற்ப பகுதியில் வட, தென் கொரியாக்களுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வந்ததாலும், வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகளாலும், தென் கொரியாவில் அமெரிக்க ராணுவம் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. அந்த நாட்டின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா கூறி வருகிறது.

ஆனால் சமீப காலமாக வடகொரியா, தென் கொரியா இடையேயும், அமெரிக்கா-வடகொரியா இடையேயும் சுமுக உறவு மலர்ந்து உள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் வியட்நாமில் சந்தித்து பேசவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது தென் கொரியாவில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘இல்லை. அது (படை வாபஸ்) குறித்த திட்டம் இல்லை. எங்கள் பேச்சுவார்த்தை திட்டத்திலும் இந்த விவகாரம் இல்லை’ என்று திட்டவட்டமாக கூறினார்.


Next Story