தீவிரவாத குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; அமெரிக்கா வலியுறுத்தல்


தீவிரவாத குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; அமெரிக்கா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Feb 2019 4:41 AM GMT (Updated: 27 Feb 2019 4:41 AM GMT)

தீவிரவாத குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

வாஷிங்டன்,

காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி கடந்த 14ந்தேதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.  இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த இயக்கத்தின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது.  இதில் 350 தீவிரவாதிகள் பலியாகினர்.

அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ அதிபர் டிரம்புடன் வியட்நாம் நாட்டிற்கு சென்றுள்ளார்.  அவர் இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தீவிரவாத தாக்குதல் பற்றி பேசினார்.  இதில், அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான நெருங்கிய பாதுகாப்பு உறவை வலியுறுத்தியதுடன், இருதரப்பு பகுதிகளிலும் அமைதி மற்றும் ஸ்திர தன்மையை மேம்படுத்துவதற்கான இலக்கு பற்றிய விவரங்களையும் பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து அவர் பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா மஹ்மூத் குரேஷியையும் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு ராணுவ நடவடிக்கையை தவிர்க்கும்படி கேட்டு கொண்டார்.  இந்த பேச்சில், பாகிஸ்தான் மண்ணில் செயல்பட்டு வரும் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக அர்த்தமுள்ள நடவடிக்கைகளை அந்நாடு எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இரு நாடுகளும் கட்டுப்பாட்டினை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறிய பாம்பியோ, இரு மந்திரிகளும் நேரடி தகவல் பகிர்வுக்கு முக்கியத்துவம் அளித்து ராணுவ நடவடிக்கைகளை தவிர்க்கும்படி கூறியுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

Next Story