அவசர நிலைக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது


அவசர நிலைக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
x
தினத்தந்தி 27 Feb 2019 11:30 PM GMT (Updated: 27 Feb 2019 5:40 PM GMT)

அமெரிக்காவில் அமலில் இருக்கும் அவசர நிலைக்கு எதிரான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

வாஷிங்டன், 

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அகதிகள் விவகாரத்தில் கடுமையான போக்கை கையாண்டு வருகிறார். அந்த வகையில் மெக்சிகோ எல்லை வழியாக அகதிகள் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைவதை தடுக்க அங்கு பிரமாண்ட தடுப்புச்சுவர் கட்ட அவர் முடிவு செய்தார்.

இந்த திட்டத்துக்காக 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரம் கோடி) நிதி ஒதுக்கும்படி நாடாளுமன்றத்தை வலியுறுத்தினார். ஆனால் ஜனநாயக கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நிதி மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்தது.

இதனால் வரலாறு காணாத வகையில் அமெரிக்காவில் பல்வேறு அரசுத்துறைகள் முடங்கின. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் எல்லைச்சுவருக்கு நிதி ஒதுக்காமல் நிதி மசோதா நிறைவேற்றப்பட்டு, அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

எனினும் எல்லைச்சுவர் கட்டும் முடிவில் விடாப்பிடியாக இருக்கும் டிரம்ப், அதற்கான நிதியை பெறுவதற்காக கடந்த 15–ந் தேதி நாட்டில் அவசர நிலையை பிறப்பித்தார். டிரம்பின் இந்த அதிரடி முடிவுக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் இடையே எதிர்ப்பு கிளம்பியதோடு, அவரது சொந்த கட்சியினரிடமும் அதிருப்தி எழுந்தது.

அதனை தொடர்ந்து டிரம்ப் அறிவித்த அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியினர் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த தீர்மானம் மீது நேற்று முன்தினம் ஓட்டெடுப்பு நடந்தது.

அப்போது பேசிய பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி, ‘‘இந்த தீர்மானம் எல்லை பிரச்சினை பற்றியது அல்ல. அமெரிக்காவின் அரசியலமைப்பு பற்றியது. அரசியலையோ அல்லது கட்சியையோ சார்ந்தது அல்ல. தேசப்பக்தியை சார்ந்தது’’ என கூறினார்.

அதன்பின்னர் அவர் தீர்மானத்தை ஓட்டெடுப்புக்கு விட்டார். ஜனநாயக கட்சியில் மொத்தம் உள்ள 232 உறுப்பினர்களும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர். அதுமட்டும் இன்றி குடியரசு கட்சியினர் 13 பேரும் இந்த தீர்மானத்தை ஆதரித்து ஓட்டுப்போட்டனர். இதன் மூலம் தீர்மானத்துக்கு ஆதரவாக மொத்தம் 245 ஓட்டுகள் கிடைத்தன.

அதே சமயம் தீர்மானத்துக்கு எதிராக 182 பேர் ஓட்டு போட்டனர். எனினும் தீர்மானத்துக்கு ஆதரவாக பெரும்பான்மையான ஓட்டுகள் கிடைத்ததால் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. இதையடுத்து இந்த தீர்மானம் செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அங்கு அடுத்த வாரத்தில் இந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தப்படும் என தெரிகிறது. செனட் சபையில் டிரம்பின் குடியரசு கட்சியினர் பெரும்பான்மையாக இருப்பதால் அங்கு இந்த தீர்மானம் நிறைவேறுமா? என்பது உறுதியாக தெரியவில்லை.

எனினும் டிரம்பின் அவசர நிலை அறிவிப்பால் அதிருப்தியடைந்திருக்கும் குடியரசு கட்சியினர் சிலர் ஜனநாயக கட்சியினருடன் சேர்ந்து தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டு போடுவார்கள் என தெரிகிறது. ஒருவேளை செனட் சபையிலும் இந்த தீர்மானம் நிறைவேறினால், அது டிரம்பின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அவர் தனது மறு ஓட்டுரிமையை பயன்படுத்தி தீர்மானத்தை நிராகரித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story