தீவிரவாதத்தினை ஒழிக்க பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஜப்பான் வலியுறுத்தல்


தீவிரவாதத்தினை ஒழிக்க பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஜப்பான் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Feb 2019 7:56 AM GMT (Updated: 28 Feb 2019 7:56 AM GMT)

தீவிரவாதத்தினை ஒழிக்க பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜப்பான் இன்று வலியுறுத்தி உள்ளது.

டோக்கியோ,

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ந்தேதி ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தீவிரவாத தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் பலியாகினர்.  இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முகாம்கள் மீது இந்திய விமான படை குண்டுகளை வீசி தாக்கி அழித்தது.  இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து இந்தியாவுக்குள் நேற்று ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் விமான படையினர் தடுத்து நிறுத்தப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டனர்.  அவர்களது எப் 16 ரக ஜெட் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்த சம்பவத்தினை அடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளும் மசூர் அசாத் பெயரை கருப்பு பட்டியலில் வைக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் கோரிக்கை வைத்தன.  இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளை தவிர்த்து எல்லையில் ஸ்திர தன்மை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என அமெரிக்கா கூறியது.

இந்த நிலையில், ஜப்பான் நாட்டின் வெளியுறவு துறை மந்திரி டாரோ கனோ கூறும்பொழுது, காஷ்மீரில் உள்ள நிலைமையை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்.  ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள, கடந்த 14ந்தேதி நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.

தீவிரவாதத்தினை ஒழிக்க பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்திய விமான படை மற்றும் பாகிஸ்தான் விமான படை நடவடிக்கைகளால் நேற்று முன்தினத்தில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ளது.  இதனை தவிர்க்க, இந்தியா மற்றும் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி அதன்வழியே நிலைமையை சீராக்க வேண்டும் என ஜப்பான் கேட்டு கொண்டுள்ளது.

Next Story