பிரேசில் அணை உடைந்து விபத்து: பலி எண்ணிக்கை 200 ஆக உயர்வு


பிரேசில் அணை உடைந்து விபத்து: பலி எண்ணிக்கை 200 ஆக உயர்வு
x
தினத்தந்தி 12 March 2019 6:19 PM GMT (Updated: 12 March 2019 6:19 PM GMT)

பிரேசில் நாட்டில் அணை உடைந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது.

பிரேசிலியா,

பிரேசில் நாட்டின் பெலோ ஹாரிசன்டே நகருக்கு தென்மேற்கே புருமடின்ஹோ என்ற இடத்தில் இரும்பு தாதுக்களுக்கான சுரங்கம் ஒன்று அமைந்து உள்ளது.  இங்கு பயன்படுத்தப்படாத நிலையில் அணை ஒன்று இருந்தது.

இந்த சுரங்கத்தில் 300க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி திடீரென அணை உடைந்து தண்ணீரும், சேறும் சகதியுமாக பெருக்கெடுத்து வெளியேறியது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அணை வளாகத்தில் இருந்த உணவகம் சகதியில் முழுவதும் புதைந்தது.
 
அணையை ஒட்டியுள்ள பகுதியில் இருந்த நிறுவனங்கள், தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் பெருமளவிலான சகதி  நிரம்பியதால், அவர்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் சமீபத்தில் வெளியான தகவலின்படி, அணை விபத்தில் உயிரிழப்பு 188 ஆக உயர்ந்ததாகவும், தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள், பொதுமக்கள் என பலரையும் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், அணை உடைந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 200 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 108 பேர் மாயமாகி உள்ளனர் எனவும், அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.   

Next Story