உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 12 March 2019 10:15 PM GMT (Updated: 12 March 2019 7:17 PM GMT)

வடகொரியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 99.99 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரியவந்துள்ளது.


* சீனாவின் ஜீஜியாங் மாகாணத்தில் கிழக்கு கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த மீன்பிடி கப்பல் மற்றொரு கப்பல் மீது மோதி தண்ணீரில் மூழ்கியது. இதில் இந்த கப்பலில் இருந்த 12 பேர் மாயமாகினர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

* காங்கோ நாட்டின் கிவு மாகாணத்தின் புடெம்போ நகரில் உள்ள எபலோ சிகிச்சை மையத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் உயிர் இழந்தார். இந்த தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

* சீனாவுடான வர்த்தக போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஜனாதிபதி டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரின் சந்திப்புக்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

* வடகொரியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 99.99 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரியவந்துள்ளது. இந்த தேர்தலில் கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜாங் வெற்றிப்பெற்று, நாடாளுமன்ற உறுப்பினரானார்.

* சீனாவின் ஹைனன் மாகாணத்தில் கடற்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலியாகினர்.

* பிரேசில் நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 25-ந் தேதி மினாஸ் கெராயிஸ் மாகாணத்தில், புருமாதின்ஹோ நகரில் அணை அடைந்து ஊருக்குள் சேறு புகுந்ததில் பலியானோரின் எண்ணிக்கை 200-ஐ எட்டியது. மாயமான 108 பேரின் கதி என்ன? என்பது இன்னமும் தெரியவில்லை.

* நைஜீரியாவின் கதுனா மாகாணத்தில் உள்ள பார்டே கிராமத்தில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலியாகினர்.


Next Story