உலக செய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல் எதிரொலி: உலகம் முழுவதும் ‘போயிங் 737’ விமானங்கள் பறக்க தடை + "||" + Echo of security threat: 'Boeing 737' flights across the world are banned from flying

பாதுகாப்பு அச்சுறுத்தல் எதிரொலி: உலகம் முழுவதும் ‘போயிங் 737’ விமானங்கள் பறக்க தடை

பாதுகாப்பு அச்சுறுத்தல் எதிரொலி: உலகம் முழுவதும் ‘போயிங் 737’ விமானங்கள் பறக்க தடை
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் ‘போயிங் 737’ விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,

அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான ‘போயிங்’ கடந்த 2017-ம் ஆண்டு ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக பயணிகள் விமானங்களை அறிமுகம் செய்தது.

இந்த ரக விமானம் அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்திலேயே உலக நாடுகளிடம் இருந்து அதிக ஆர்டர்களை பெற்றது. அதன்படி போயிங் நிறுவனம் 100-க்கும் மேற்பட்ட ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களை தயாரித்து வழங்கியது.


இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி இந்தோனேசியாவின் லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம், புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 189 பேர் உயிர் இழந்தனர்.

அதே போல் எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த 10-ந் தேதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர். விமானம் பயன்பாட்டுக்கு வந்த குறுகிய காலத்திலேயே தொடர்ந்து 2 பெரும் விபத்துகளை சந்தித்ததால், ‘போயிங் 737 மேக்ஸ்’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது.

இதனால் சீனா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களை இயக்க தடை விதித்தன. குறிப்பாக இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இந்த ரக விமானங்களை இயக்க தடை விதித்ததோடு, தங்களின் வான்பரப்பில் இந்த விமானங்கள் பறக்கவும் தடைபோட்டன.

எனினும், இந்த விமானத்தில் குறைபாடு இருப்பதாக காட்டுவதற்கு ஆதாரம் இல்லை என கூறி அமெரிக்கா மட்டும் தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து வந்தது. ஆனால் எத்தியோப்பியா விமான விபத்து தொடர்பாக புதிய ஆதாரம் ஒன்றை விசாரணையாளர்கள் கண்டுபிடித்ததையடுத்து ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் சேவையை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.

இந்த நிலையில், அமெரிக்காவும் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களை இயக்க தடைவிதித்ததால், உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள இந்த ரக விமானங்களின் சேவையை நிறுத்திவைப்பதாக ‘போயிங்’ நிறுவனம் தெரிவித்தது.

இது குறித்து ‘போயிங்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானத்தின் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து முழு நம்பிக்கை உள்ளது. எனினும் எச்சரிக்கை காரணமாகவும், விமான பாதுகாப்பு குறித்து அதில் பயணிக்கும் பொதுமக்களுக்கு முழு உத்தரவாதமும், நம்பிக்கையும் அளிக்கும் பொருட்டும் உலகம் முழுவதும் இந்த ரக விமானங்களின் இயக்கம் நிறுத்திவைக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.